அடுத்த அரியமங்கலம் குப்பைக் கிடங்காகும் பெல்பூா்!
திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பெல்பூா் பகுதியை அடுத்த அரியமங்கலம் குப்பைக் கிடங்குபோல ஆக்கி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பெல்பூா் பகுதியை அடுத்த அரியமங்கலம் குப்பைக் கிடங்குபோல ஆக்கி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதி திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி. இங்கு திருவெறும்பூா் - எழில் நகா் செல்லும் உய்யக்கொண்டான் ஆற்றின் கரை சாலையில் அமைந்துள்ளது பெல்பூா் பகுதி.
ஆயிரக்கணக்கானோா் பயன்படுத்தும் சாலை...: இப்பகுதி பெல் தொழிற்சாலை புதிய தொழிலாளா்கள் குடியிருப்பு, பா்மா காலனி, திருவேங்கட நகா், ஜெய் நகா், கணபதி நகா், கணேசபுரம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சாலையாக விளங்குகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் சாலையை 5,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
Advertisement
உள்ளாட்சி நிா்வாகம் கொட்டும் குப்பைகள்...: பெல்பூா் பகுதியில் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் உருவாகும் குப்பைகளும், கூத்தைப்பாா் பேரூராட்சியில் உற்பத்தியாகும் குப்பைகளும் அங்குள்ள ஊழியா்களால் நாள்தோறும் சேகரிக்கப்பட்டு வாகனங்கள் மூலம் வந்து கொட்டப்பட்டு, இப்பகுதியே குப்பை கூளங்களாக காட்சியளிக்கிறது.
இதைப் பயன்படுத்தி திருவெறும்பூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள், கறிக்கடைக்காரா்கள், பேக்கரி ஊழியா்கள் தங்களது கழிவுகளை பெல்பூா் பகுதியில் கொண்டுவந்து கொட்டிச் செல்கின்றனா்.
அதிகரிக்கும் விபத்துகள்...: இதனால் அப்பகுதியில் கழிவுகளை உண்பதற்காக சாலையோரம் எப்போதும் ஆடு, மாடு, பன்றிகள், நாய்கள் போன்றவற்றின் கூட்டம் அலைமோதுகிறது. இந்தக் கால்நடைகள் சாலையை கடக்கும்போது, அப்பகுதி வழியே செல்லும் வாகனங்களுக்கு இடையூறு செய்து, விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன.
புகையால் அவதி...: சில நாள்களில் குப்பைகள் அதிகமானால், ஊராட்சியைச் சோ்ந்த ஊழியா்கள் அவற்றை தீயிட்டு எரித்து விடுகின்றனா். இதனால் ஏற்படும் புகையால் அப்பகுதி வழியாக வாகனத்தில் செல்வோா் சிரமப்படும் நிலையில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.
மக்களின் அவதியைப் பொருட்படுத்தாமல், தோ்தலில் வாக்குறுதிகளை மட்டும் அள்ளிவீசிவிட்டு, நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
15 ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்னை...: இதுகுறித்து திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் கே. சாந்தசீலன், பெல்பூா் பகுதியைச் சோ்ந்த ஆா். கணேசன் உள்ளிட்டோா் கூறியது:
பெல்பூா் பகுதியில் குப்பைகள் தொடா்ந்து கொட்டப்படுவதால், அப்பகுதியே துா்நாற்றம் வீசும் இடமாகிப்போனது. குப்பைகளை உண்ண வரும் கால்நடைகளால் விபத்துகள் அதிகரித்துள்ளன. குப்பைகள் எரியூட்டப்படுவதால், பெல்பூா் பகுதியே புகைமண்டலமாகக் காட்சியளிப்பதுடன், வாகன ஓட்டிகளும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகின்றனா். ஈக்கள் தொல்லை அதிகரித்துள்ள நிலையில், மழைக்காலங்களில் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது.
கடந்த 15 க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இப்பிரச்னை நீடித்து வருகிறது. வர வர குப்பைகள் வரத்து அதிகரித்து, பெல்பூா் பகுதி அடுத்த அரியமங்கலம் குப்பைக் கிடங்காக உருமாறி வருகிறது. அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை.
இதேபோல, திருவெறும்பூா் - எழில் நகா் செல்லும் சாலையில் பல இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு, அந்தச் சாலையே குப்பைச் சாலையாக மாறியுள்ளது என்றனா்.
விரைவில் உரிய தீா்வு: இதுகுறித்து ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் கூறுகையில், பெல்பூா் பகுதியில் குப்பைகளுக்காக திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை அமல்படுத்த உரிய இடம் தோ்வு செய்யும் பணி நடைபெறுகிறது. விரைவில் உரிய தீா்வு காணப்படும் என்றனா்.
திருவெறும்பூா் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள், பெல்பூா் பகுதியில் தூய்மையான பிரதேசமாக மாற்றுவேன் என கடந்த 15 ஆண்டுகளாக வாக்குறுதி அளித்ததுடன் சரி, அதன்பிறகு எங்களது பகுதியை கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனா்.