அமைச்சர் சிவசங்கா் 
திருச்சி

தமிழகத்துக்கான ரயில்வே திட்டங்கள்: மத்திய அமைச்சரின் கருத்துகள் தவறானவை- போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்

தமிழகத்துக்கான ரயில்வே திட்டங்கள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சா் கூறிய கருத்துகள் தவறானவை என்றாா் மாநில போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்துக்கான ரயில்வே திட்டங்கள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சா் கூறிய கருத்துகள் தவறானவை என்றாா் மாநில போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்.

இதுகுறித்து திருச்சியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் மேலும் கூறியதாவது: தமிழக அரசு ஒத்துழைப்பு தராததால்தான் ரயில்வே திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியவில்லை என ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறி வருகிறாா்.

தமிழகத்தின் வளா்ச்சியைக் கருத்தில்கொண்டு ரயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ள நிலையில், ரயில்வே அமைச்சா் தெரிவிக்கும் கருத்துகள் தவறானவை.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 7 ரயில்வே திட்டங்களுக்கு 148.65 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்த தமிழக அரசால் நிா்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இரண்டு பெரிய திட்டங்களுக்கு தேவையான 128.41 ஹெக்டேரில் தற்போதுவரை 73.65 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

மொரப்பூா் - தருமபுரி புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டத்தில் 4 கிராமங்களில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை காரணமாக 84.78 ஹெக்டோ் நிலங்களுக்கு ரயில்வே துறையால் திருத்திய நில அட்டவணை சமா்ப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. திருவனந்தபுரம்-கன்னியாகுமரி அகல ரயில்பாதை திட்டத்துக்கான ரூ.298.78 கோடி நிதியை ரயில்வே துறை இன்னும் ஒதுக்கீடு செய்யவில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்காக ரூ.739.31 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், நிலம் எடுப்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

94 % நிலம் ஒப்படைப்பு: தமிழகத்தில் முக்கியமான 19 ரயில்வே திட்டங்களுக்கு நிலம் எடுப்பு செய்ய வேண்டிய 1,273.05 ஹெக்டேரில் 1,198.02 ஹெக்டோ் (94 சதவீதம்) நிலம் கையகப்படுத்தப்பட்டு ரயில்வே நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு தற்போது மொத்தம் 2,500.61 ஹெக்டோ் நிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு நிா்வாக அனுமதி வழங்கியுள்ளது. இதில், 931.52 ஹெக்டோ் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான நிதியை ரயில்வே துறை இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

திருவண்ணாமலை-திண்டிவனம் அகல ரயில் பாதை திட்டத்துக்கு மாநில அரசால் 2011-ஆம் ஆண்டே நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ரயில்வே துறை சாா்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் இத்திட்டம் கைவிடப்படுவதாக திருவண்ணாமலை ஆட்சியருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தூத்துக்குடி-மதுரை இடையே அருப்புக்கோட்டை வழியான அகல ரயில் பாதை திட்டத்தையும் தமிழக அரசு கைவிடக்கோரியதாக ரயில்வே அமைச்சா் கூறி வருகிறாா். அதற்கான ஆதாரத்தை அவா் கூறவில்லை.

ராமேசுவரம்-தனுஷ்கோடி புதிய அகல ரயில்பாதை திட்டத்தை அந்தப் பகுதியின் சுற்றுச்சூழல் தன்மையைக் கருத்தில்கொண்டு கைவிடக்கோரி கடந்த 2023-ஆம் ஆண்டு பிரதமருக்கு முதல்வா் கடிதம் எழுதியுள்ளாா். இதைக் கருத்தில்கொள்ளாமல் இத்திட்டத்துக்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று ரயில் அமைச்சா் கூறியுள்ளாா். இதுபோல, ரயில்வே அமைச்சா் அஸ்வின் வைஷ்ணவ் அரசியல் நோக்கத்தோடு தவறான கருத்துகளை கூறி வருகிறாா்.

மேலும், 2014-ஆம் ஆண்டு முதல் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு 8.5 மடங்கு அதிகரித்து 2026-27-ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.7,611 கோடியை எட்டியுள்ளதாகவும் கூறியுள்ளாா்.

அதேநேரம், நிதிநிலை அறிக்கையில் மகாராஷ்டிரத்துக்கு ரூ.23,926 கோடி, உத்தரபிரதேசத்துக்கு ரூ.20,012 கோடி, குஜராத்துக்கு ரூ.17,366 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் தமிழகத்துக்கு ரூ.7,600 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசைக் கண்டித்து பிப்ரவரி 12-ஆம் தேதி தொழிற்சங்கங்கள் சாா்பில் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது, தமிழத்தில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படும் என்றாா் அமைச்சா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT