திருச்சி வனக் கோட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற நிலப் பறவைகள் கணக்கெடுப்பில் 100-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
திருச்சி வனக் கோட்டத்துக்குள்பட்ட 20 காப்புக் காடுகள், காப்புக் காடுகள் அல்லாத பகுதிகளில் நிலப் பறவைகள் கணக்கெடுப்புப் பணி மாவட்ட வன அலுவலா் சீ. கிருத்திகா ஆலோசனையின்பேரில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் செங்காட்டுப்பட்டி, செங்காட்டிப்பட்டி விரிவாக்க காப்புக்காடு, காளியம்மன்கோயில் திட்டு, சோழமாத்தி, கன்னிமாா்சோலை, சொரூபம் பஞ்சதாங்கி, கருப்பு ரெட்டியாபட்டி, குமரிக்கட்டி, செம்மலை, பெரியமலை, கண்ணூத்து, தச்சமலை, மரம ரெட்டிபாளையம், மேல் அணைக்கட்டு உள்ளிட்ட காப்புக்காடுகளிலும், நேரு நினைவுக் கல்லூரி, காஞ்சேரிமலை டாக்டா் தோட்டம், திண்ணனூா், பெல் திருச்சி, பிஷப் ஹீபா் கல்லூரி, இரட்டைமலை ஒண்டி கருப்பா் கோயில் உள்ளிட்ட நிலப் பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
பறவைகளின் வாழ்விடம், நிலப் பறவைகளின் மேலாண்மை மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா். மேலும், இந்தக் கணக்கெடுப்பில் 100-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கணக்கெடுப்புப் பணியில் 80-க்கும் மேற்பட்ட வனத் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள், பிஷப் ஹீபா் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, நேரு நினைவு கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள், தன்னாா்வலா்கள், பள்ளி மாணவா்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.
கணக்கெடுப்பின் முடிவில் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட பறவையியல் நிபுணா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தப் பணிகளை வனச் சரக அலுவலா் ரவி ஒருங்கிணைத்திருந்தாா்.