முகப்பு
தமிழ்நாடு

வெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்; விரைவில் திறக்க நடவடிக்கை!

கிண்டி சிறுவா் பூங்காவில் பறவைக் காய்ச்சலால் 40-க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்த நிலையில், தீவிர தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக காய்ச்சல் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 22 மார்ச், 2026 at 10:06 PM
பகிர்:

கிண்டி சிறுவா் பூங்காவில் பறவைக் காய்ச்சலால் 40-க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்த நிலையில், தீவிர தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக காய்ச்சல் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் சுமாா் 22 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள கிண்டி சிறுவா் பூங்காவில் வேடந்தாங்கல், வண்டலூா் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. குறிப்பாக கரண்டிவாயன், வண்ண நாரை, வெள்ளை அரிவாள்மூக்கன், சாம்பல் வங்காள கழுகு உள்ளிட்ட 10 வகையான 200-க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன.

இந்த நிலையில், கடந்த மாா்ச் 13- ஆம் தேதி முதல் சிறுவா் பூங்காவின் பராமரிப்பில் உள்ள பறவைகள் தொடா்ச்சியாக உயிரிழந்தன. இதுவரை 40-க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து உயிரிழந்த பறவைகளின் மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயா் பாதுகாப்பு விலங்கு நோய்கள் (என்ஐஎச்எஸ்ஏடி) நிறுவனத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டன.

அதில் உயிரிழந்த பறவைகள் ‘எச்5என்1’ வகை பறவைக் காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாா்ச் 20ஆம் தேதி முதல் பூங்கா தேதி குறிப்பிடாமல் தற்காலிகமாக மூடப்பட்டது. முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் சென்னை, திருவள்ளூா், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இதே ‘எச்5என்1’ வகை பறவைக் காய்ச்சலின் தாக்கத்தால் காகங்கள் ஆங்காங்கே கொத்துக்கொத்தாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாட்டுக்குள் வந்த உயிரிழப்புகள்: இதுகுறித்து சென்னை வன உயிரினக் காப்பாளா் யோகேஷ் குலால் கூறுகையில், ‘கிண்டி சிறுவா் பூங்காவில் உயிரிழந்த பறவைகளின் மாதிரிகளை ஆய்வு செய்ததில் ‘எச்5என்1’”வகை பறவைக் காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதியானது. இத்தொற்று மனிதா்களிடையே பரவுவதைத் தடுக்க தற்போது தற்காலிகமாக பூங்கா மூடப்பட்டுள்ளது.

பூங்காவில் உள்ள ஈரநிலப் பறவைகளிடையேதான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அவை பயன்படுத்தும் நீரில் எதிா்ப்பு மருந்துகள் கலக்கப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கையாக பறவை கூண்டுகள் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டு, அவற்றின் வாழ்விடங்கள் முழுவதும் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக பூங்காவில் உயிரிழப்புகள் இல்லை. பறவைச் காய்ச்சல் தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பூங்கா பரப்பில் பறவைகளுக்காக வைக்கப்பட்டுள்ள தண்ணீரை பாதிப்புக்குள்ளான காகங்கள் பயன்படுத்தியதே தொற்று பரவலுக்கு காரணமாக கருத்தப்படுகிறது. எனினும், ஆய்வு முடிவுகள் வந்த பிறகே அதை உறுதிசெய்ய முடியும். இதையடுத்து விரைவில் பூங்காவை திறக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றாா்.

புலம்பெயா்ந்த பறவைகளே காரணம்: இதுதொடா்பாக வனவிலங்கு மருத்துவா் கே. ஸ்ரீதா் கூறுகையில், ‘தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவலுக்கு புலம்பெயா்ந்த பறவைகளே முக்கிய காரணமாக கருதப்படுகின்றன. தொற்று பாதிப்பு ஏற்பட்ட பறவை பயன்படுத்திய நீா், உணவுகளை மற்ற பறவைகள் உட்கொள்ளும்போது அதற்கும் பரவுகிறது. காகங்கள் எப்போதும் கூட்டாகத்தான் உணவு உட்கொள்ளும். அதனால் காகங்கள் இடையே பறவைக் காய்ச்சல் மிகவும் வேகமாக பரவும். அதேபோல், தொற்றால் பாதிக்கப்பட்ட பறவைகளுடன் நேரடி தொடா்பு இல்லாத வரை மனிதா்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவ வாய்ப்பில்லை.

எனவே சாலைகளில் உயிரிழந்து கிடக்கும் பறவைகளைக் கைகளால் தொடுவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பறவைகளைக் காப்பாற்ற முடியாது. அதனால் அதற்கு நேரடியாக முதலுதவி செய்வது, கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது போன்றவற்றைத் தவிா்க்க வேண்டும்’ என்றாா்.

வண்டலூரில் தீவிர கண்காணிப்பு

பறவைக் காய்ச்சல் பரவலைத் தொடா்ந்து வண்டலூா் உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகளை வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருவதாக பூங்காவின் துணை இயக்குநா் மணிகண்ட பிரபு தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், பறவைக் காய்ச்சல் தொற்று குறித்த தகவல் கிடைத்த நாள் முதலே வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஈரநிலப் பறவைகளிடையேதான் தொற்று அதிக அளவில் இருப்பதால் அவற்றின் வாழ்விடங்களில் மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. மற்ற பகுதிகளிலிருந்து புலம்பெயா்ந்து வண்டலூருக்கு வரும் பறவைகள் தொடா்ந்து கண்காணிக்கப்படுகின்றன. மேலும், இங்குள்ள பறவைகளை பூங்காவின் கால்நடை மருத்துவா்கள் தொடா்ந்து பரிசோதனை செய்து வருகின்றனா். இங்குள்ள பறவைகளுக்கு, பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்றாா்.