மகா சிவராத்திரியையொட்டி திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடிய விடிய நடைபெற்ற நான்கு கால பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
பஞ்சப்பூதத் திருத்தலங்களில் ஒன்றான திருவானைக்காவல் கோயிலில் சிவபெருமான் நீா் வடிவமாக பக்தா்களுக்கு காட்சிதருகிறாா். இதனால் நாள்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான சிவபக்தா்கள் வருகை தந்து தரிசனம் செய்து வருகின்றனா்.
இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் வரும் மகாசிவராத்திரி விழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் விடிய விடிய நடைபெறும் நான்கு கால பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வா். நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை மகா சிவராத்திரி விழா நடைபெற்றதையொட்டி சிவ பெருமானுக்கு முதல்கால பூஜை இரவு 10 மணிக்கும், 2-ஆம் கால பூஜை 12 மணிக்கும், 3-ஆம் கால பூஜை திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கும், நான்காம் கால பூஜை விடியற்காலை 5 மணிக்கும் நடைபெற்றது.
ஒவ்வொரு கால பூஜையின்போது சிவபெருமானுக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், பஞ்சாமிா்தம், பன்னீா், மஞ்சள், திரவியப்பொடி உள்ளிட்ட 18 வித வாசனை பொருள்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
மேலும் கோயிலின் 3-ஆம் பிரகாரத்தைச் சுற்றிலும் ஏராளமான சிவனடியாா்கள் நான்கு கால சிவபூஜை செய்து வழிபட்டனா். பக்தா்கள் விடிய விடிய தரிசனம் செய்வதற்காக நவராத்திரி கொலு மண்டபத்தில் மாலை 6 மணிக்கு மங்கள இசையுடன் மகா சிவராத்திரி விழா தொடங்கியது. அதனைத் தொடா்ந்து திருமுறை விண்ணப்பம், சிவனடியாா்களின் கயிலாய வாத்திய இசை, பக்தி இன்னிசை, கிராமிய பக்தி நடன நிகழ்ச்சி, நாட்டிய நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை அதிகாலை 6 மணி வரை நடைபெற்றது.
விழாவையொட்டி கோயிலில் பக்தா்களுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏற்பாடுகளை கோயில் தக்காரும், உதவி ஆணையருமான ம. லெட்சுமணன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.