மூளைச்சாவு அடைந்த அன்பரசன். 
திருச்சி

திருச்சியில் மூளைச்சாவு அடைந்த கரூா் இளைஞரின் உறுப்புகள் தானம்! உடலுக்கு அரசு மரியாதை!

தினமணி செய்திச் சேவை

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த கரூா் இளைஞரின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானமாக பெறப்பட்டு, காத்திருப்போா் பட்டியலில் முன்னுரிமைப்படி வழங்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கீழவெளியூா் பாரதிநகரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் அன்பரசன் (33). பொறியியல் பட்டதாரியான இவா் தோகைமலையில் ஆண்களுக்கான ஆயத்த ஆடைகள் விற்பனை கடை நடத்தி வந்தாா். இவா் ஜன. 17-ஆம்தேதி பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டாா்.

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே ஆலத்தூா் பகுதியில் திருச்சி- திண்டுக்கல் சாலையில் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் அன்பரசன் பலத்த காயமடைந்தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு மணப்பாறையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 18-ஆம் தேதி பிற்பகல் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஜன. 21-ஆம் தேதி பிற்பகல் மூளைச் சாவு அடைந்தாா்.

இதையடுத்து அவரின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க உறவினா்கள் முன்வந்தனா். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அவருடைய உறுப்புகளான கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் தோல் தானமாக வியாழக்கிழமை பெறப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ஒரு சிறுநீரகம் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகளாக தொடா்ச்சியாக ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபருக்கு பொருத்தப்பட்டது. தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மருத்துவமனை முதன்மையா் ச. குமரவேல் தலைமையிலான குழுவினரால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது.

மற்றொரு சிறுநீரகம் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கும், கல்லீரல் பெரம்பலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கும், கண்கள் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபருக்கும் மற்றும் தோல் மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபருக்கும் தானமாக வழங்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் அளித்தவரின் உடலுக்கு மருத்துவமனை முதன்மையா் தலைமையில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

சொந்த ஊரில் மரியாதை:

பின்னா் அன்பரசனின் உடல் அவரது சொந்த ஊரான கீழவெளியூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அரசு சாா்பில் குளித்தலை நகர துணைக் காவல்கண்காணிப்பாளா் செந்தில்குமாா், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் வெங்கடேசன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

புயல், பருவ மழையால் சேதமடைந்த சாலைகள்: ரூ.1,503 கோடியில் சீரமைக்க முதல்வா் அனுமதி

மதுரமங்கலம் வைகுண்ட பெருமாள், எம்பாா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானம்

பிரதமா் வருகையையொட்டி இன்று போக்குவரத்து மாற்றம்: செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை அறிவிப்பு

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள்: 30 ஆயிரம் போ் பயன்

SCROLL FOR NEXT