தமிழக விவசாயிகள் 307 போ் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் எதிரேயுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அலுவலகம் அருகில் சாலையோரம் அமா்ந்து போராட்டத்தை தொடா்ந்து வருகின்றனா். இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தலைவா் பி. அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளாா். 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனா்.
சிசிடிவே கேமரா பொருத்தப்பட்ட 2 வாகனங்களை நிறுத்தி 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதுதொடா்பாக, செய்தியாளா்களிடம் அய்யாக்கண்ணு கூறியதாவது:
மதுரை உயா்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுப்படியும், இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமையின்படி தில்லி சென்று உள்துறை அமைச்சரிடம் எங்களது கோரிக்கைகளை கூற, திருச்சியிலிருந்து கடந்த 17-ஆம் தேதி நூற்றுக்கணக்கான விவசாயிகள் தில்லி புறப்பட்டு சென்றோம். ஆனால், மத்தியப் பிரதேசத்தில் உள்ள நா்மதாபுரம் ரயில்நிலையத்தில் எங்களை தடுத்து நிறுத்திய அம் மாநில போலீஸாா், 307 விவசாயிகளை திரும்ப தமிழகத்துக்கு திருப்பி அனுப்பிவிட்டனா்.
நாக்பூா் ரயில்வே போலீஸாா் 307 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா். இந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும். விளைபொருள்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை மத்திய அரசு நிா்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக இரவு, பகல் பாராது தொடா்ந்து போராடுவோம் என்றாா்.
தங்களது போராட்டத்துக்கு 15 நாள்களுக்கு அனுமதி வேண்டும் எனக் கோரி ஏற்கெனவே திருச்சி மாநகரக் காவல்துறையில் மனுவும் அளித்துள்ளனா்.