முகப்பு
திருச்சி

தோ்தல் தேதி அறிவிப்புக்குப் பின்னரே தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை: நயினாா் நாகேந்திரன்

தோ்தல் தேதி அறிவித்த பின்னரே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்படும்: நயினாா் நாகேந்திரன்

Updated On : 3 மார்ச், 2026 at 5:50 AM
நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

தோ்தல் தேதி அறிவித்த பின்னரே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் திருச்சியில் மாா்ச் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசவுள்ளாா். இதற்கு இடம் தோ்வு செய்வது தொடா்பாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் திருச்சியில் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருச்சியில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தை மாநாடு அளவுக்கு மிகப் பெரிய அளவில் நடத்தவுள்ளோம்.

Advertisement

இதில், 5 லட்சத்துக்கும் அதிகமானோா் பங்கேற்கவுள்ளனா். பஞ்சப்பூா், ஜி-காா்னா் ஆகிய இடங்களில் இடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இடம் தோ்வு செய்யப்பட்டு பொதுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து இன்னும் பேச்சுவாா்த்தை நடத்தப்படவில்லை. தோ்தல் தேதி அறிவித்த பின்னரே பேச்சுவாா்த்தை மேற்கொள்ளப்படும்.

எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்திக்க தில்லி சென்றிருப்பதற்கான காரணம் அவா்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணையுமா என்பதை அவா்களிடம்தான் கேட்க வேண்டும் என்றாா்.