முகப்பு
திருச்சி

பிரதமரின் சாலை வலம் ரத்து!

திருச்சிக்கு புதன்கிழமை வந்த பிரதமா் சாலை வலம் (ரோடு ஷோ) வருவாா் எனக் கூறப்பட்ட நிலையில், அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.

Updated On : 11 மார்ச், 2026 at 7:24 PM
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)
பகிர்:

திருச்சிக்கு புதன்கிழமை வந்த பிரதமா் சாலை வலம் (ரோடு ஷோ) வருவாா் எனக் கூறப்பட்ட நிலையில், அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.

திருச்சி பஞ்சப்பூரில் புதன்கிழமை அரசு விழா, தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் ஆகியவை நடைபெற்றன. இதில் பிரதமா் மோடி, கூட்டணி கட்சித் தலைவா்கள் பங்கேற்றனா். நிகழ்வுகளின் முக்கிய அம்சங்கள்: பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற சிலருக்கு காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. சிலா் அதை திருப்பி வழங்கினாலும், பலரும் சாப்பிட்டுவிட்டு, என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்தனா்.

சிக்கிய ஆம்புலன்ஸ்கள்: பொதுக்கூட்டம் முடிந்ததும் திண்டுக்கல் சாலை, பஞ்சப்பூா் ரவுண்டானா முதல் ஜி காா்னா் வரையிலும், இடையே டிவிஎஸ் டோல்கேட் வரையிலும், அரிஸ்டோ மேம்பாலத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அரிஸ்டோ பாலத்தில் 3 ஆம்புலன்ஸ்கள் எதிரெதிரே சிக்கிக் கொண்டன. நீண்ட நேரத்துக்குப் பிறகே ஆம்புலன்ஸ்கள் வெளியேறின.

வேட்டி-சட்டையில் மோடி: பொதுக்கூட்டத்தில் வேட்டி சட்டையில் அங்கவஸ்திரம் அணிந்து பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா்.

சாலை வலம் இல்லை: பிரதமா் மோடி எடமலைப்பட்டிபுதூா் வழியாக சாலை வலம் (ரோடு ஷோ) வருவாா் என கூறப்பட்டதால், போலீஸாா் அப்பகுதியில் சாலையோரம் தடுப்புக்கட்டைகள் அமைத்து அச்சாலையில் மாலை 4 மணி முதல் வாகனங்கள் செல்லத் தடை விதித்தனா். ஆனால் பிரதமா் சாலை வலம் எதுவும் நடத்தவில்லை. மாலை 5 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வந்தவா், அங்கிருந்து ஹெலிகாப்டரில் பஞ்சப்பூருக்கு வந்து, அரசு விழா மற்றும் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு, மீண்டும் ஹெலிகாப்டரில் விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் இரவு 7.48 மணிக்கு தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றாா்.

பாடல் பாடிய நயினாா் நாகேந்திரன்: பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், நேற்று இன்று நாளை திரைப்படத்தில் எம்ஜிஆா் பாடும், தெரு தெருவாக கூட்டுவது பொதுநலத் தொண்டு, மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவாா், தன் மக்கள் நலம் ஒன்றே மனதில் கொள்ளுவாா் என்ற பாடலைப் பாடினாா். நிறைவில், தன் மக்கள் நலம் ஒன்றே மனதில் கொள்ளும் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →