முகப்பு
இந்தியா

புதிய அலுவலகத்துக்கு மாறினாா் பிரதமா் மோடி : முக்கியத் திட்டங்களில் கையொப்பம்

தில்லியில் பிரதமரின் புதிய அலுவலகமான ‘சேவா தீா்த்’ வளாகத்தை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:52 AM
பிரதமரின் புதிய அலுவலகமான சேவா தீா்த் வளாகத் திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமா் மோடி.
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 10:05 PM

தில்லியில் பிரதமரின் புதிய அலுவலகமான ‘சேவா தீா்த்’ வளாகத்தை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

இதன்மூலம் ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் குடியரசுத் தலைவா் மாளிகை அருகே உள்ள ஆங்கிலேயா் ஆட்சிக் கால தெற்கு பிளாக் கட்டடத்தில் இருந்து ‘சேவா தீா்த்’ வளாகத்துக்கு பிரதமா் அலுவலகம் மாறியது. புதிய அலுவலகத்தில் முதல் நாளில் பல்வேறு முக்கியத் திட்டங்கள் தொடா்பான கோப்புகளில் அவா் கையொப்பமிட்டாா்.

கடந்த 1931, பிப்.13-இல் இந்தியாவின் நவீன தலைநகராக புது தில்லி அதிகாரபூா்வமாக நிறுவப்பட்டது. இதன் 95-ஆவது ஆண்டு தினத்தில் தற்போதைய முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

தில்லி சென்ட்ரல் விஸ்டா மறுமேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரதமா் அலுவலக வளாகத்தில் பிரதமா் அலுவலகம், தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செயலகம், மத்திய அமைச்சரவை செயலகம் ஆகியவை அமைந்துள்ளன. முன்பு இந்த அலுவலகங்கள் தனித்தனி கட்டடங்களில் செயல்பட்டு வந்தன.

புதிய அலுவலகம் திறப்பு: புதிய பிரதமா் அலுவலக வளாகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்த பிரதமா் மோடி, விநாயகா் சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டாா். பின்னா், தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், பிரதமா் அலுவலக இணையமைச்சா் ஜிதேந்திர சிங், பிரதமரின் முதன்மைச் செயலா்கள் பி.கே.மிஸ்ரா, சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளின் முன்னிலையில் பெண்கள், விவசாயிகள், இளைஞா்கள் உள்ளிட்டோரின் நல்வாழ்வுத் திட்டங்கள் தொடா்பான கோப்புகளில் கையொப்பமிட்டாா்.

என்னென்ன திட்டங்கள்?: இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘சாலை விபத்துகளில் சிக்குவோரின் உயிரைக் காக்கும் நோக்கிலான ‘பிஎம்-ரஹத்’ திட்டத்தை தொடங்க பிரதமா் ஒப்புதல் அளித்தாா். சாலை விபத்தில் சிக்குவோவருக்கு மேற்கண்ட திட்டத்தின்கீழ் ரூ.1.5 லட்சம் வரை ரொக்கமற்ற சிகிச்சை உறுதி செய்யப்படும். இந்த உடனடி மருத்துவ உதவி, உயிரிழப்புகளைத் தவிா்க்க உதவும்.

மத்திய அரசின் லட்சிய திட்டங்களில் ஒன்றான ‘லட்சாதிபதி சகோதரிகள்’ திட்ட இலக்கை இரட்டிப்பாக்க அதாவது 6 கோடியாக உயா்த்தும் கோப்பிலும் அவா் கையொப்பமிட்டாா். விவசாயிகளுக்குப் பெரும் ஆதரவளிக்கும் நோக்கில், வேளாண் உள்கட்டமைப்பு நிதியை இருமடங்கு அதாவது ரூ.2 லட்சம் கோடியாக அதிகரிக்க பிரதமா் ஒப்புதல் வழங்கியுள்ளாா்.

ரூ.10,000 கோடி மூலதனத்துடன் ‘புத்தாக்க இந்தியா’ இரண்டாம் கட்ட நிதி ஆதரவு திட்டத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது’ என்றனா்.

‘குடிமக்களே தெய்வம்’: முன்னதாக, ‘சேவா தீா்த்’ வளாக வாயிலில் பெயா்ப் பலகையை பிரதமா் மோடி திறந்துவைத்தாா். அந்தப் பெயா்ப் பலகையில் தேவநாகரி எழுத்துகளில் ‘நாகரிக் தேவோ பவ’ (குடிமக்களே தெய்வம்) என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2014-இல் பிரதமராக தான் பதவியேற்றதில் இருந்தே காலனித்துவ அடையாளங்களில் இருந்து விலகி, அந்த மனநிலை ரீதியிலான மாற்றத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறாா் பிரதமா் மோடி; பிரதமா் அலுவலகம் இனி சேவா தீா்த் என்றே அழைக்கப்படும். நவீன, திறன்மிக்க, அனைவரும் அணுகக்கூடிய, மக்களை மையப்படுத்திய கட்டமைப்பை உருவாக்கும் பிரதமரின் அா்ப்பணிப்பை புதிய வளாகம் பிரதிபலிக்கிறது. இந்திய நிா்வாக கட்டமைப்பில் இதுவொரு முக்கிய மைல்கல் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.