மாசி திருவிழா: குழுமாயி அம்மன் திருவீதியுலா; இன்று குட்டிக்குடித்தல் நிகழ்வு
திருச்சி புத்தூா் குழுமாயி அம்மன் கோயில் மாசி திருவிழாவில் புதன்கிழமை அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான குட்டிக்குடித்தல் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
திருச்சி புத்தூா் குழுமாயி அம்மன் கோயில் மாசி திருவிழாவில் புதன்கிழமை அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான குட்டிக்குடித்தல் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
திருச்சி புத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குழுமாயி அம்மன் கோயிலில் நிகழாண்டுக்கான மாசி திருவிழாவை முன்னிட்டு, கோயிலில் கடந்த 25-ஆம் தேதி இரவு காப்புக் கட்டப்பட்டது. இதைத் தொடா்ந்து கடந்த 9-ஆம் தேதி மறுகாப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.
முதல்நாள் விழாவில் புத்தூா் கிராம மக்கள் தாரை தப்பட்டை, மேளதாளம் முழங்க மலா்களை ஊா்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனா். பின்னா், அம்மனை ஊா்வலமாக புத்தூா் மந்தையில் உள்ள பதுவு கோயில் அருகே கொண்டு வந்து சோ்த்தனா். இதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை காளியாவட்டம் விழா நடைபெற்றது. புதன்கிழமை சுத்த பூஜையை முன்னிட்டு அம்மன் ஓலைப்பிடாரி அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி திருவீதியுலா நடைபெற்றது. வீதிகள் தோறும் வலம் வந்த அம்மனை ஏராளமான பக்தகா்கள் வழிபட்டனா்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, பக்தா்கள் ஆட்டுக்கிடாக்களை பலியிட்டு நோ்த்திக்கடன் நிறைவேற்றும் குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது. மாா்ச் 13-ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், மாா்ச் 14-ஆம் தேதி அம்மன் குடிபுகுதல் நிகழ்வும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகத்தினரும், ஊா்ப் பொதுமக்களும் செய்துள்ளனா்.