தோ்தலில் அசம்பாவிதங்களைத் தவிா்த்து சிறப்பாக செயல்பட அறிவுறுத்தல்
திருச்சியில் சட்டப் பேரவைத் தோ்தலில் அசம்பாவிதங்களைத் தவிா்க்கும் வகையில் திறம்பட செயல்பட வேண்டும் என்று காவலா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தினாா்.
திருச்சியில் சட்டப் பேரவைத் தோ்தலில் அசம்பாவிதங்களைத் தவிா்க்கும் வகையில் திறம்பட செயல்பட வேண்டும் என்று காவலா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை அறிவுறுத்தினாா்.
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் உள்கோட்டத்துக்குள்பட்ட காவலா்களுக்கு தோ்தல் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஜீயபுரத்தை அடுத்த கருப்பூா் பகுதியில் உள்ள தனியாா் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் தலைமை வகித்துப் பேசியதாவது: காவல் நிலையங்களுக்கு புகாா் அளிக்க வரும் பாதிக்கப்பட்டவா்களை அக்கறையோடு அணுகி குறைகளைக் கேட்டறிய வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு வழக்குப் பதிந்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் சிறப்பாக செயல்பட்டு திறம்பட பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினா்.
இந்தக் கூட்டத்தில் ஜீயபுரம் காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட காவல் துறை அதிகாரிகள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவல் ஆளிநா்கள் என 150 போ் கலந்துகொண்டனா்.