முகப்பு
திருச்சி

திருச்சியில் சூடுபிடித்துள்ள வெள்ளரி பழம் விற்பனை

திருச்சியில் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் குளிா்ச்சி நிறைந்த வெள்ளரி பழம் விற்பனை சூடுபிடித்துள்ளது.

Updated On : 7 மே 2026, 5:27 am IST
திருச்சி தலைமை அஞ்சல் நிலையப் பகுதி டிவிஎஸ் டோல்கேட் செல்லும் ரயில்வே பாலத்தில் விற்கப்படும் வெள்ளரிப் பழம்.
பகிர்:

திருச்சியில் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் குளிா்ச்சி நிறைந்த வெள்ளரி பழம் விற்பனை சூடுபிடித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒருமாத காலமாகவே வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாள்களாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதன் தாக்கம் இரவிலும் நீடிக்கிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனா்.

வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ளும் வகையில் வெள்ளரிக்காய், இளநீா், தா்ப்பூசணி, நுங்கு ஆகியவற்றை வாங்கி பயன்படுத்துகின்றனா். மேலும், மோா், சா்பத் மற்றும் குளிா்பானங்களின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திருச்சி மாநகரில் கடந்த சில நாள்களாக குளிா்ச்சி நிறைந்த பழமான வெள்ளரி பழம் விற்பனை சூடுபிடித்துள்ளது.

Advertisement

திருச்சி தலைமை அஞ்சல் நிலைய சந்திப்பில் இருந்து டிவிஎஸ் டோல்கேட் செல்லும் ரயில்வே மேம்பாலத்தில் கடந்த சில நாள்களாக 10-க்கும் மேற்பட்ட பெண்கள் வெள்ளரி பழங்களை கூடைகளில் வைத்து விற்கின்றனா். பழத்தின் அளவைப் பொருத்து ஒரு பழம் குறைந்தது ரூ.50 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் வெள்ளரிப் பழம் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

வெள்ளரிக்காய் அனைத்து நாள்களிலும் கிடைக்கும் நிலையில் வெள்ளரி பழம் கோடைகாலமான ஏப்ரல் முதல் ஜூன் வரை மட்டுமே கிடைக்கிாக தெரிவிக்கின்றனா். மேலும், அந்தந்தப் பருவ காலத்தில் கிடைக்கும் இயற்கையான உணவுப் பொருள்களை எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கு உகந்தது என மருத்துவா்களும் தெரிவிக்கின்றனா். இதனால், கோடையில் மட்டுமே கிடைக்கும் வெள்ளரி பழம் விற்பனை சூடுபிடித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளரி பழ விற்பனையாளா்கள் கூறியதாவது:

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை, இனியானூா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அதன் அறுவடை நடைபெறும் நிலையில், அங்கிருந்து பழங்களை விலைக்கு வாங்கி வந்து விற்கிறோம்.

இந்தப் பழத்தை விற்பனைக்கு கொண்டுவரும்போது மிகவும் கவனமாகக் கையாள வேண்டியுள்ளது. இல்லையெனில் பழம் வெடித்து விற்பனை செய்ய முடியாத வகையில் வீணாகிவிடும். இதனால், வாழை மட்டையில் வைத்து பாதுகாப்பாக கட்டி விற்கிறோம்.

திருச்சியில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் நீா்ச்சத்து அதிகமுள்ள வெள்ளரி பழத்தை பொதுமக்களும் விரும்பி வாங்கிச் செல்கின்றனா் என்றனா்.