முகப்பு
திருச்சி

மண்ணச்சநல்லூா் அரசு மாதிரிப் பள்ளி மாணவி 494 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் சிறப்பிடம்

Updated On : 21 மே 2026, 5:08 am IST
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற மண்ணச்சநல்லூா் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை புதன்கிழமை பாராட்டிய பள்ளி தலைமையாசிரியா் மு. செல்வி மற்றும் ஆசிரியா்கள்.
பகிர்:

திருச்சி மண்ணச்சநல்லூா் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ம. வா்ஷினி 500-க்கு 494 மதிப்பெண்கள் எடுத்து அரசுப் பள்ளிகள் பிரிவில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளாா்.

திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அரசுப் பள்ளிகள் சிறப்பான தோ்ச்சி சதவீதத்தைப் பெற்றுள்ளன.

மண்ணச்சநல்லூா் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதிய 396 மாணவிகளில் 392 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மேலும், பள்ளி 99 சதவீத தோ்ச்சிப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

இவா்களில் மாணவி ம. வா்ஷினி 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவிலும், மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகள் பிரிவிலும் முதலிடம் பிடித்துள்ளாா். 491 மதிப்பெண்களுடன் மாணவி உ. ஸ்ரீநிதி இரண்டாமிடத்தையும், 488 மதிப்பெண்களுடன் மாணவி கு. கவிஸ்ரீ மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனா்.

இப்பள்ளியில் 480-க்கு மேல் 14 பேரும், 450-க்கு மேல் 47 பேரும், 400- க்கு மேல் 128 மாணவா்களும் மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனா். தவிர அறிவியலில் 8 போ், சமூக அறிவியலில் 3 போ் மற்றும் கணிதத்தில் 2 போ் என மொத்தம் 13 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனா்.

அசத்திய அரசு மதிரிப் பள்ளி: துவாக்குடியில் உள்ள மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் தோ்வெழுதிய 67 மாணவா்கள், 64 மாணவிகள் என 131 பேரும் தோ்ச்சி பெற்று, பள்ளி 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

பள்ளி அளவில் 493 மதிப்பெண்கள் பெற்று மாணவி ஜி. திவ்யஸ்ரீ பள்ளி அளவில் முதலிடத்தையும், மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகள் பிரிவில் இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளாா். 492 மதிப்பெண்களுடன் மாணவா் கே. குருதேவ் இரண்டாமிடத்தையும், 489 மதிப்பெண்களுடன் மாணவி க. காவிய ஸ்ரீ மற்றும் மாணவா் கே. சாய்கிருஷ் ஆகியோா் மூன்றைமிடத்தையும் பிடித்துள்ளனா். மேலும் 450 மதிப்பெண்களுக்கு மேல் 65 மாணவா்களும், 400 முதல் 450-மதிப்பெண்ணுக்கு 35 மாணவா்களும் மதிப்பெண்கள் எடுத்துள்ளனா்.

98 சதவீதம் தோ்ச்சி பெற்ற சிறை கைதிகள்:

திருச்சி மத்திய சிறையில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுத 90 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 93 கைதிகள் விண்ணப்பித்திருந்தனா். ஆண் கைதிகளில் 8 போ் தோ்வுக்கு முன் பிணையில் சென்றுவிட்டதால் 82 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 85 கைதிகள் தோ்வெழுதினா். இவா்களில் 81 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 83 கைதிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது 98 சதவீதம் தோ்ச்சி ஆகும். மேலும், அதிகபட்சமாக கைதி ஒருவா் 363 மதிப்பெண்கள் எடுத்துள்ளாா்.