ஆரணி: வடகிழக்கு பருவ மழையால் நெல் பயிரிட ஏதுவான நிலை உள்ளது. விவசாயிகள் நெல்லில் அதிக மகசூல் எடுத்திட ராஜராஜன் 1000 நெல் சாகுபடி முறையினை கடைப்பிடிக்க வேண்டும் என மேற்குஆரணி வேளாண் உதவி இயக்குநர் க.செல்வராஜி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது:
விவசாயிகள் தற்போதைய சூழ்நிலையில் நெல் உற்பத்தி திறனை அதிகரிக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல் குறைந்த நீரில் சாகுபடி செய்யக்கூடிய தொழில்நுட்பமும் தேவைப்படுகிறது. அவ்வகையில் ராஜராஜன் 1000 நெல் சாகுபடி முறை வரப்பிரசாதமாகும்.
ராஜராஜன் 1000 நெல் சாகுபடியானது கடந்த ஆண்டு தமிழகத்தில் 6.4 லட்சம் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, சராசரியாக ஹெக்டருக்கு 9000 கிலோ விளைச்சலைத் தந்துள்ளது.
இச்சாகுபடிக்கு 14 நாள் வயதுடைய வீரிய நாற்றுகளைப் பயன்படுத்த வேண்டும். இதற்காக நாற்றங்காலை அந்தந்த மண் சூழ்நிலைக்கேற்ப உருவாக்க வேண்டும்.
பொதுவாக ஏக்கருக்கு 3 கிலோ விதை மட்டும் தேவையென்பதால் ஒரு சென்ட் நாற்றங்காலே போதுமானது. விதைத்த ஒரு வாரத்துக்குப் பின் நாற்று வளர்ச்சி குறைவாக இருந்தால் 50 கிராம் யூரியாவை 10 லிட்டர் நீரில் கரைத்து பூவாளி கொண்டு தெளிக்கலாம்.
நடவு: 25ஷ்25 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய ஏதுவாக குறியீட்டு கருவியைப் பயன்படுத்தலாம். குத்துக்கு ஒரு நாற்று மட்டும் நட வேண்டும். நீர் தேங்கும் இடங்களில் மட்டும் குத்துக்கு 2 நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும். நாற்றுகளை ஆழமாக நடுவதை கண்டிப்பாக தவிர்க்கவும்.
நீர் மேலாண்மை: மண்ணில் காற்றோட்டம் இருக்கும் வகையிலும் நுண்ணுயிர்களின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையிலும் காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர் பாய்ச்ச வேண்டும். குறிப்பாக தொடர்ந்து பாசன நீரை தேக்கி வைக்கக்கூடாது.
களைக்கருவிகளை பயன்படுத்துதல்: இச்சாகுபடி முறையில் களைக்கருவிகளை பயன்படுத்த வேண்டும். நடவு நட்ட 10 நாள்கள் கழித்து கோனோ வீடர் களைக் கருவிகளைக் கொண்டு குறுக்கும், நெடுக்குமாக ஓட்ட வேண்டும். இதனால் வேர்களின் வளர்ச்சி அதிகமாகி தூர்களின் எண்ணிக்கையும் கூடுகிறது. களைகள் ஒருபுறம் கட்டுப்படுத்தப்படுவதோடு அந்த களைகளே உரமாகவும் பயன்படுகிறது. மேற்படி சாகுபடி முறையில் சாதாரண முறையை விட கூடுதலாக சுமார் 1500 கிலோ மகசூல் கிடைக்கிறது. செலவினம் குறைவதோடு ஆள்கள் பற்றாக்குறையையும் சமாளிக்க ஏதுவாக உள்ளது. எலித் தொல்லையால் ஏற்படும் மகசூல் இழப்பு தவிர்க்கப்படுகிறது.
எனவே, ராஜராஜன் 1000 சாகுபடி முறையை ஊக்குவிக்க ஒருங்கிணைந்த தானிய உற்பத்தி திட்டத்தின் மூலமாகவும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலமும் செயல் விளக்கம் அமைக்க விதை மற்றும் கோனோ வீடர் களை கருவிகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
இதற்காக வேளாண் விரிவாக்க மையங்களை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என்றார் செல்வராஜி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.