தொடர்கிறது குடிநீர் பற்றாக்குறை!
வேலூர், ஜூன் 15: கோடை காலம் முடிவுறும் நிலையிலும் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை தொடர்கிறது. குடிநீர் விநியோகத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியே இதற்குக் காரணம் என்று பு
வேலூர், ஜூன் 15: கோடை காலம் முடிவுறும் நிலையிலும் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை தொடர்கிறது.
குடிநீர் விநியோகத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியே இதற்குக் காரணம் என்று புகார் எழுந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 40 லட்சத்தைக் கடந்துள்ளது. இங்கு, வேலூர் மாநகராட்சி, 13 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள், 753 ஊராட்சிகள் என ஏராளமான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. ஆனால், மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,12,257 வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குடிநீர் விநியோகம், சீரமைப்புப் பணி ஆகியவற்றுக்காக சுமார் 2,700 பேர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் களப் பணியாளர்கள்.
Advertisement
ஆனால், தேவையான ஆட்கள் இருந்தும், குடிநீர் இணைப்பு பெற்ற வீடுகளுக்குத் தேவையான குடிநீரை விநியோகிக்க முடியாமல் மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது.
15 நாள்களைக் கடந்து குடிநீர் விநியோகிக்கப்படுவதால், அதிருப்தி அடைந்துள்ள பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்று பல இடங்களில் மறியல் போராட்டங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.
கோடையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, தண்ணீர் எடுக்கும் அளவு குறைவதாலும், மின்தடையாலும், 4 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகிக்க முடியவில்லை என்று மாவட்ட நிர்வாகத்தினர் கூறிவந்தனர். ஆனால், கிடைக்கும் தண்ணீரையும் சரிவர மக்களுக்கு விநியோகிக்க முடியாதபடி, பல இடங்களில் முறைகேடுகள் நடப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட, வேலூர் நகரின் குடிநீர்த் தேவை தினசரி சுமார் 2.40 கோடி லிட்டர். இதற்காக, ஓட்டேரி, பொன்னையாறு, பாலாறு, கருகம்புத்தூர் பகுதிகளில் இருந்து குடிநீர் கொண்டுவரப்படுகிறது. ஆனால், அங்கிருந்து தினசரி 45 லட்சம் லிட்டர் வரைதான் தண்ணீர் கிடைக்கிறது என்று மாநகராட்சி நிர்வாகம் கூறி வருகிறது.
அதிலும், ஓட்டேரி ஏரியில் ஏற்கெனவே இருக்கும் 2 கிணறுகளோடு, கூடுதலாக 4 புதிய ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்ட பிறகு, தினசரி 12 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. ஆனால், பில்டர்பெட் சாலையில் உள்ள குடிநீர்த் தொட்டிக்கு 7 லட்சம் லிட்டர் மட்டுமே கிடைக்கிறது. வழியில் 5 லட்சம் லிட்டர் குடிநீர் எங்கு செல்கிறது என்பது தெரியவில்லை என மாநகராட்சி அலுவலர்களே தெரிவிக்கின்றனர்.
இதுதவிர, பொன்னையாற்று நீர் வேலூர் நகருக்குள் வரும் முன்பே, சத்துவாச்சாரி நகராட்சியினர் அதிக அளவு தண்ணீரை எடுத்துவிடுவதாகவும், அதனால், வேலூருக்குக் குறைந்த அளவே தண்ணீர் கிடைப்பதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
சத்துவாச்சாரி நகராட்சி புகார்: மொத்தம் ஒதுக்கப்பட்ட 10 மணி நேரத்தில்தங்கள் பகுதிக்குத் தேவையான 25 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்துக்கொள்வதாக சத்துவாச்சாரி நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஒதுக்கப்பட்டுள்ள 38 மணி நேரத்தில் வேலூர் மாநகராட்சி 90 லட்சம் லிட்டர் வரை எடுப்பதாகத் தெரியவருகிறது. ஆனால்,
50 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே எடுப்பதாக வேலூர் மாநகராட்சி கூறிவருவது முரண்பாடாக உள்ளது. கூடுதல் தண்ணீர் எங்கே செல்கிறது? என்கின்றனர் சத்துவாச்சாரி நகராட்சியினர்.
ஓட்டேரி ஏரியிலிருந்தும் பொன்னையாற்றிலிருந்தும் கணக்கில் காட்டாமல் உள்ளே வரும் தண்ணீரை வேறு திசைக்கு சிலர் திருப்புவதாகவும் புகார் எழுந்துள்ளது. முக்கியப் பிரமுகர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு மட்டும் தினசரி, பல மணி நேரம் தண்ணீர் விநியோகிக்கப்படுவதாகவும், விற்பனைக்காக தண்ணீர் வெளியேற்றப்படுவதாகவும், தனியார் மருத்துவமனைகள், கல்லூரிகளுக்குப் பெரும்பாலான நீர் திருப்பி விடப்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது.
இதுதவிர, அனுமதியின்றி போடப்பட்ட குடிநீர்க் குழாய் இணைப்புகள் மற்றும் மோட்டார்கள் மூலம் தண்ணீர் அதிக அளவு உறிஞ்சப்படுவதாக புகார் கூறப்படுகிறது.
இந் நிலையில், குடிநீர் விநியோகத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளைச் சீரமைத்தாலே, மக்களுக்கு ஓரளவு சீராக குடிநீர் விநியோகிக்க முடியும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், குடிநீர் விநியோகத்தைக் கண்காணிக்கும் பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.