வேலூர்

தொழில் நகரான ஒசூருக்கு நேர்ந்த சோகம் ஒப்பந்தத்தோடு முடிந்துபோன மெகா திட்டங்கள்!

ஒசூர், மே 11: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் சிறப்புப் பொருளாதார மண்டலம், ஐ.டி. பார்க், 3-வது சிப்காட் ஆகியன அமைக்கப்படும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு அறிவித்தது. இத் திட்டங்களை நிறைவேற்ற

டி.ஞானபிரகாசம்

ஒசூர், மே 11: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் சிறப்புப் பொருளாதார மண்டலம், ஐ.டி. பார்க், 3-வது சிப்காட் ஆகியன அமைக்கப்படும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு அறிவித்தது. இத் திட்டங்களை நிறைவேற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. ஆனால், திட்டத்துக்கான ஆரம்பக் கட்டப் பணிகள் கூட நடைபெறாமல் உள்ளதாகத் தொழில் துறையினர் புகார் கூறுகின்றனர்.

 தொழில் துறை மேம்பாடு, ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு, பொருளாதார நிலையில் மேலும் உயர்வு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, அறிவிக்கப்பட்ட மெகா திட்டங்களுக்கு விரைவாகச் செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்றே தொழில் துறையினர் விரும்புகின்றனர்.

  சிறப்புப் பொருளாதார மண்டலம்:  ஒசூர் வட்டம் பைரமங்கலம், ஒன்னல்வாடி, காரப்பள்ளி, காரண்டப்பள்ளி உள்ளிட்ட 5 கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் என 2007-ல் தமிழக அரசு அறிவித்தது.

 இம்மண்டலத்தில் தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் ஏற்றுமதி, வாகன உற்பத்தி உள்ளிட்டவை ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைக்கப்படும். தமிழகத்தில் நாங்குனேரிக்கு அடுத்ததாக 2-வது சிறப்புப் பொருளாதார மண்டலமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

 இதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக 2007-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.500 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இதற்கு மத்திய அரசும் அனுமதி அளித்தது.

 இந்த அடிப்படை கட்டமைப்புகளை மேற்கொள்ள ஆந்திர நிறுவனமான ஜி.எம்.ஆர். நிறுவனத்துடன் தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துக் கொண்டது.

சுமார் 40 ஆயிரம் இளைஞர்கள் நேரடியாக வேலைவாய்ப்பை பெறுவர் என்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்போது கூறப்பட்டது.

 4 ஆண்டுகள் முழுமையாக கடந்துவிட்ட நிலையில், ஒசூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் இதுவரை அமைக்கப்படவில்லை.

 தகவல் தொழில் நுட்பப் பூங்கா (ஐ.டி. பார்க்):  ஒசூரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (ஐ.டி.பார்க்) விஸ்வநாதபுரம் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான 173.25 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படும் என 2008 நிதிநிலை அறிக்கையின்போது சட்டப்பேரவைக் கூட்டத்தித் தொடரில் தெரிவிக்கப்பட்டது.

 மேலும், அடிப்படை கட்டமைப்புகளை மேற்கொள்ள தமிழக அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த ஐ.டி. பார்க்குக்காக தனியாரிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்த வேண்டிய நிலையும் இல்லை.

 இந் நிலையில், இதற்காகத் தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை, எல்காட் நிர்வாக இயக்குநர் சந்தோஷ்பாபு உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ஓராண்டில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றனர். ஆனால், அடிப்படைப் பணிகள் கூட இதுவரை தொடங்கப்படவில்லை.  

3-வது சிப்காட்:  ஒசூரில் 1, 2-வது சிப்காட் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பெரிய தொழில் நிறுவனங்களும், 1000-க்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், சூளகிரி அருகே 3 ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பில் 3-வது சிப்காட் அமைக்கப்படும் என 2009-ல் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற தொழில்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது.  இதற்காக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சுமார் 1,000 ஏக்கர் நிலங்களை கையப்படுத்தியது. இதைத் தவிர வேறு எவ்வித பணிகளும் நடைபெறவில்லை.

 மூன்றோடு சேர்ந்தது

இன்னொன்று?:  

மேற்கண்ட 3 மெகா திட்டங்கள் அறிவிக்கப்பட்டதோடு நின்றுவிட்ட நிலையில், ஒசூரில் தனியார் வானூர்தி பூங்கா அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை மானியக் கோரிக்கையின்போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்துள்ளார்.   இந்நிலையில் அறிவிப்போடு நின்றுவிட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.    

தொழில், பொருளாதார ரீதியில் ஒசூர் வளர்ச்சி பெற இத்திட்டங்களை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்பதே தொழில்துறையினரின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

SCROLL FOR NEXT