ஆரணி, நவ. 6: போளூர் வட்டம், படவேடு அருகே நாகநதியின் குறுக்கே |34 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட செண்பகத்தோப்பு அணையை உடனடியாகத் திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த அணை திறக்கப்படாததால் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு பாசனம் செய்ய வேண்டிய தண்ணீர் வீணாகி வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஜவ்வாதுமலையின் கிழக்குச்சரிவில் பட்டரைக்காடு என்னும் ஒதுக்குக்காட்டில் கமண்டலாறு உற்பத்தியாகி, செண்பகத்தோப்பு கிராமத்தின் வழியாகச் செல்கிறது.
பின்னர் அருகே உள்ள நாகநதியுடன் சேர்ந்து கமண்டல நாகநதி என்ற பெயரில், ஆரணி வழியாக வாழப்பந்தல் ஆற்றில் செய்யாற்றுடன் கலக்கிறது. இந்நிலையில் செண்பகத்தோப்பு கிராமத்தில் இந்த புதிய அணை கட்டப்பட்டுள்ளது (படம்).
அணை மதிப்பீடு உயர்ந்தது!
இந்த அணை கட்டும் திட்டம் 1996ஆம் ஆண்டு |24 கோடி மதிப்பில் துவக்கப்பட்டது. பின்னர் இத்திட்டத்தின் மதிப்பு |34 கோடியாக உயர்த்தப்பட்டது.
2007ஆம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டது. 2008 ஜனவரி மாதம் அணை திறப்பு விழா நடைபெறும் என்று அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று வரை அணை திறக்கப்படவில்லை.
46 ஏரிகளுக்கு தண்ணீர் நிரம்பும்!
செண்பகத்தோப்பு அணையில் தேக்கி வைக்கப்படும் மதகின்வழியே தண்ணீர் திறந்து விடப்பட்டு அலியாபாத் அணைக்கட்டு, வெல்லூர் அணைக்கட்டு, சத்தியவிஜயநகர அணைக்கட்டு மற்றும் கமண்டல நாகநதியிலிருந்து பிரியும் 2 திறந்த வாய்க்கால்கள் மூலம் 30 கிராமங்களில் உள்ள 46 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பப்படும் என்றும் இதன்மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலம் நீர்ப்பாசனம் பெறும் என்றும் பொதுப் பணித் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் கூடுதல் உணவு உற்பத்தி 4953 டன்னாக இருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மழைக்காலத்தின்போது தேக்கிவைக்கப்பட்ட தண்ணீர் பாசனத்துக்கு திறந்துவிடப்படாமல் உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. எனவே, அணையை திறந்துவைத்து பாசனத்துக்கு தண்ணீரை விட வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும்
மேலும், இயற்கை எழில்மிகு மலைகளால் சூழப்பட்ட இடத்தில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் சிறு சிறு அருவிகளும் உள்ளன. ஆகவே, இந்த அணையை சுற்றிலும் பூங்காக்கள் அமைத்து சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என்றும் கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.