சென்னை-அரக்கோணம் மின் ரயில்களில் அதிகரிக்கும் "ஈவ்டீசிங்'
சென்னை, அக். 23: சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் இடையே புறநகர் மின் ரயில்களில் ஈவ்டீசிங் அதிகரித்து வருவதால் பெண் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட புறநகர்
சென்னை, அக். 23: சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் இடையே புறநகர் மின் ரயில்களில் ஈவ்டீசிங் அதிகரித்து வருவதால் பெண் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள்
அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்குச் செல்ல மின் ரயில்களை மட்டுமே நம்பியுள்ளனர்.
இந்தப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவிகளும் இந்த ரயில்களில் தான் சென்று திரும்புகின்றனர்.
ஆனால், முக்கிய நேரங்களிலும், நெரிசலைப் பயன்படுத்தியும் ரயில்களில் ஈவ்டீசிங் செய்யும் கும்பலின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் சொல்ல முடியாத அளவுக்கு பெண்கள் நரக வேதனைப் படும் நிலை தொடர்கிறது.
பீடா, பாக்கு, பான்பராக் உள்ளிட்ட லாகிரி வஸ்துக்களைப் பயன்படுத்தும் இந்தக் கும்பல் ரயில்களில் தொங்கியவாறே வெளியில் துப்புவதால், ஜன்னலோரப் பயணிகள் மீது எச்சில் பட்டு, அவர்கள் அவமானமும், அசூயையும் அடைவது வாடிக்கையாக மாறிவிட்டது.
தொல்லை பேசிகளாக மாறிய செல் பேசிகள்:
இந்தக் கும்பலைச் சேர்ந்த சிலர் மெமரி கார்டில் பதிவு செய்யப்பட்ட ஆபாசமான பாடல்களை தங்களது செல்போன்களில் ஒரே நேரத்தில் உரத்த குரலில் ஒலிக்கச் செய்து ரசிப்பதிலும் ஈடுபடுகின்றனர்.
ரயில் பெட்டிகளில் தூங்கும் பெண்களை அவர்களுக்கே தெரியாமல் செல் போனில் படம் பிடித்து, புளூ டூத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்களுக்குள் பரிமாறிக் கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.
ஈவ்டீசிங் கொடுமையின் உச்சகட்டமாக, ரயில் பெட்டிகளில், ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் இளம் பெண்களிடம் மோசமாகவும் இந்தக் கும்பல் நடந்து கொள்கிறது.
ஆனால், பாதிக்கப்படும் பெண்கள், இதுகுறித்து வெளியில் சொல்லவும் வழியின்றி தவிக்கின்றனர்.
இந்தக் கும்பலின் அட்டகாசத்தை யாராவது தட்டிக் கேட்டால், அவர்களை தாக்கி அச்சுறுத்துவதாக பயணிகள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.
பெண்களுக்கான பெட்டிகளை அடுத்துள்ள பெட்டியையும், முதல் வகுப்பு பெட்டியையும் இந்தக் கும்பல் ஆக்கிரமித்துக் கொள்கிறது. சில நேரங்களில் சூதாட்ட விடுதியாகவும் மாற்றப்படும் அவலம் தொடர்கிறது.
சென்ட்ரல்- அரக்கோணம் மார்க்கத்தில் திருவாலங்காடு, மணவூர், மோசூர், செஞ்சிபனம்பாக்கம், கடம்பத்தூர், ஏகாட்டூர், திருநின்றவூர், ஆவடி, அம்பத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் இந்தக் கும்பலின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது என்று பயணிகள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.
ரயில்வே போலீஸô பாராமுகம்:
இதுகுறித்து புகார் கொடுத்தாலும் ரயில்வே பாதுகாப்புப் படையினர், ரயில்வே போலீஸôரும் பாராமுகமாகவே உள்ளதாக சிவராமன் என்ற பயணி தெரிவித்தார்.
இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் மகளிர் மட்டும் ரயில்களில் செல்வதைத் தவிர்க்குமாறு இந்தக் கும்பல் மிரட்டுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.