பகலில் சேகரிப்பு; இரவில் கடத்தல்
ஒசூர், செப். 11: மணல் குவாரிகளில் இருந்து தமிழக பதிவு எண் கொண்ட லாரிகளில் எடுத்து வரப்படும் மணல் ஒசூர் அருகே சேகரித்து வைக்கப்படுகிறது. பின்னர் இவை இரவு நேரங்களில் கர்நாடக பதிவு எண் கொண்ட லாரிகளில் கட
ஒசூர், செப். 11: மணல் குவாரிகளில் இருந்து தமிழக பதிவு எண் கொண்ட லாரிகளில் எடுத்து வரப்படும் மணல் ஒசூர் அருகே சேகரித்து வைக்கப்படுகிறது. பின்னர் இவை இரவு நேரங்களில் கர்நாடக பதிவு எண் கொண்ட லாரிகளில் கடத்திச் செல்லப்படுகிறது.
தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு மணல் எடுத்துச் செல்வதற்கு தமிழக அரசு 2009-ல் தடைவிதித்தது.
இதையடுத்து, மணல் குவாரிகளில் தமிழக பதிவு எண் கொண்ட லாரிகள் மற்றும் டிராக்டர்களில் மட்டும் மணல் ஏற்றிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட லாரிகளுக்கு தமிழக மணல் குவாரிகளில் மண்ல் எடுக்க அனுமதி மறுக்கப்படுகிறது.
Advertisement
பெங்களூரில் மணல் விலை அதிகம்
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் அடிப்படை கட்டமைப்புப் பணிகள் மட்டுமின்றி கட்டடப் பணிகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனால், மணல் அதிக அளவில் தேவைப்படுகிறது.
தமிழகத்தில் ஒரு லாரி மணல் |4 ஆயிரம் முதல் |5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், கர்நாடகத்தில் ஒரு லாரி மணல் |12 ஆயிரம் முதல் |15 ஆயிரம் வரை விற்பனையாகிறது.
சேகரிக்கப்படும் மணல்
இதனால், வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு மணல் குவாரிகளில் மணலை வாங்கி தமிழக-கர்நாடக எல்லையான கொத்தகொண்டப்பள்ளி சந்திப்புச் சாலையில் மணல் சேகரிக்கப்படுகிறது.
பகல் நேரங்களில் தமிழக பதிவு எண் கொண்ட லாரிகளிலிருந்து குவாரிகளிலிருந்து மணல் பெறப்பட்டு, இங்கு சேகரிக்கப்படுகிறது. பின்னர் இரவு நேரங்களில் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட லாரிகளில் மணல் கடத்திச் செல்லப்படுகிறது.
நாள்தோறும் 100 லாரிகளில்..
இவ்வாறாக நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் கடத்திச் செல்லப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரசு அதிகாரிகளின் துணையோடு நடைபெறும் மணல் கடத்தலைத் தடுக்க வேண்டும் என தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காரணம், இதன் பிண்ணனியில் அரசியல் பிரமுகர்களின் ஆதரவும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள கனிம வளங்களை அண்மையில் மாநிலங்களுக்கு கொள்ளையடிப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. எனவே, மணல் கடத்தி வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.