தி.மலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?
திருவண்ணாமலை, டிச. 18: திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா என விவசாயிகள் எதிர்நோக்கி உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டமாக உள்ளது. தமிழகத்தில்
திருவண்ணாமலை, டிச. 18: திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா என விவசாயிகள் எதிர்நோக்கி உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டமாக உள்ளது. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்து நெல் உற்பத்தியில் இம் மாவட்டம் சிறந்து விளங்குகிறது.
நடப்பாண்டு 1 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 6 லட்சம் டன் மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நெல் அறுவடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பதற்குத் தயாராக உள்ளனர்.
கடந்த அறுவடைக் காலத்தின்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசபாக்கம், வடமாதிமங்கலம், தேவிகாபுரம், பிரம்மதேசம், சீசமங்கலம், படவேடு, சேத்துப்பட்டு, செய்யாறு, மழையூர், நாட்டேரி, செங்கம், தண்டராம்பட்டு, வேட்டவலம், கீழ்பென்னாத்தூர் உள்பட 16 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டன.
இதனால் விவசாயிகள் தங்கள் நெல்லை அதிக விலைக்கு விற்று வருவாய் ஈட்டினர். ஆனால் தற்போது அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் மூடப்பட்டு விட்டன.
10 ஆயிரம் மூட்டைகள் சேதம்
மேலும் அண்மையில் பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகள் விற்பனைக்காக வைத்திருந்த 10 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்தன.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவிண்டாலுக்கு ரூ.1100 வரை விவசாயிகளுக்கு தரப்பட்டது. ஆனால் தற்போது தனியாரிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.600 முதல் 650 வரை மட்டுமே விலை தரப்படுகிறது.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் ராஜேந்திரன் கூறியது:
நெல் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும். மாவட்டத்தில் இயங்கி வந்த நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் கடந்த ஜூன் மாதம் மூடப்பட்டுவிட்டன. தற்போது நெல் அறுவடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வணிகவரி அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் தலையிட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வழி காணவேண்டும் என்றார்.