வேலூர்

திமுகவினருக்கு "வரவு': அதிமுகவினருக்கோ "செலவு'

குடியாத்தம், மார்ச் 9: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திமுக வாக்குச் சாவடி கமிட்டி உறுப்பினர்களின் செலவுக்காக இதுவரையில் 2 தவணைகளாக பணம் வழங்கப்பட்டுள்ளது.  இதனால், அவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும

கே. நடராஜன்

குடியாத்தம், மார்ச் 9: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திமுக வாக்குச் சாவடி கமிட்டி உறுப்பினர்களின் செலவுக்காக இதுவரையில் 2 தவணைகளாக பணம் வழங்கப்பட்டுள்ளது.

 இதனால், அவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் சில தவணைகள் பணம் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் மேலோங்கியுள்ளது.

 இதேநேரத்தில், கடந்த 5 ஆண்டுகளாக கைக்காசை செலவழித்துக் கட்சிப்பணி செய்து வரும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் இது விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

 வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், தங்கள் கூட்டணியில், எந்தெந்தத் தொகுதிகளில் எந்தெந்தக் கட்சி போட்டியிடுகிறது, யார் வேட்பாளர் என்று தெரியாத நிலையில் 2 மாதங்களுக்கு முன்னரே திமுக மற்றும் அதிமுகவினர் தேர்தல் பணியாற்றத் தொடங்கி விட்டனர்.

 வாக்குச் சாவடி, பகுதி, தொகுதி, மாவட்ட வாரியாகத் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளை பல நிலைகளில் நியமித்து, திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் பணியை முடுக்கிவிட்டன.

 உற்சாகமும், விரக்தியும்..

 ஆளுங்கட்சியினர் ஒப்பந்ததாரர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மூலம் பண உதவிகள் பெற்றும், வேறு சில வகைகளில் வருவாய் ஈட்டியும் கட்சிப் பணியாற்றி வருகின்றனர்.

 ஆனால், எதிர்தரப்பினரான அதிமுகவினர் தங்களுக்கு வருவாய் எதுவும் இல்லாத நிலையில், கட்சி அறிவிக்கும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்தி, கைக்காசு செலவழித்து கட்சிப் பணியாற்றி வருகின்றனர்.

 மேலும், மாநிலம் முழுவதும் கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா பங்கேற்கும் ஆர்ப்பாட்ட பொதுக் கூட்டங்களுக்கு சொந்தப் பணத்தை செலவழித்து சென்று வருகின்றனர். உடன் தொண்டர்களையும் வாகனம் வைத்து அழைத்துச் செல்கின்றனர்.

 அடுத்து நமது கட்சி ஆட்சிக்கு வரும் என்ற நினைப்பில் அதிமுகவினரின் செயல்பாடுகள் அமைந்துள்ள நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் திமுக தரப்பில் வாக்குச்சாவடி கமிட்டி உறுப்பினர்களுக்கு முதல்கட்ட செலவுக்காக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை வழங்கப்பட்டது.

 அதை அதிமுகவினர் பெரிதாக நினைக்காத நிலையில் இப்போது திமுக தரப்பு 2-வது தவணையாக வாக்குச் சாவடி கமிட்டிக்கு ரூ.5 ஆயிரம் வரை பணம் வழங்கியுள்ளது.

 தங்கள் தொகுதியில் எந்தக் கட்சி போட்டியிடுகிறது, யார் வேட்பாளர் என எந்த விவரமும் தெரியாத நிலையில் கட்சித் தலைமை பணம் வழங்கி வருவது திமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 ஆதங்கத்தில் அதிமுகவினர்!

 திமுகவின் இந்த செயல், கைக்காசை செலவழித்து காலமெல்லாம் கட்சிப் பணி செய்து வரும் அதிமுகவினர் மத்தியில் சிறிது விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

 தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், ஆதங்கத்தை தீர்க்கவும் அதிமுக தலைமை நடவடிக்கையை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 கூட்டணிக் கட்சியினர்  குழப்பம்!

 திமுக, அதிமுக கட்சிகள் கடந்த ஜனவரி மாதமே ஆரம்பக் கட்டத் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. இரு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள வாக்குச்சாவடி, பகுதி, தொகுதி வாரியான தேர்தல் பணிக் குழுக்கள் தனித் தனியே அமைக்கப்பட்டுள்ளன. இக்குழு உறுப்பினர்கள் பட்டியலை அக்கட்சிகளின் மாவட்ட தலைமையும் உறுதி செய்துள்ளது.

 இந்நிலையில், கூட்டணி நிலவரம் ஏறக்குறைய இறுதியாகியுள்ளது. இதையடுத்து, இரு கட்சியினரும் தனியே தேர்தல் பணிகளைத் தொடங்குவார்களா அல்லது கூட்டணிக் கட்சிப் பிரமுகர்கள் உள்ளடக்கிய புதிய தேர்தல் பணிக் குழுக்கள் அமைக்கப்படுமா? என்பது புரியாத புதிராக உள்ளதாக கூட்டணிக் கட்சிப் பிரமுகர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT