பராமரிப்பில்லாமல் தானிப்பாடி சுப்பிரமணியர் கோவில் சொத்துகள்
திருவண்ணாமலை, நவ. 26: தண்டராம்பட்டு தாலுகா, தானிப்பாடியில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில், சொத்துகள் இருந்தும் பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. தானிப்பாடி குளத்துமேடு பகுதியில் உள்ள இக்கோயில் கடந்த 1847
திருவண்ணாமலை, நவ. 26: தண்டராம்பட்டு தாலுகா, தானிப்பாடியில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில், சொத்துகள் இருந்தும் பராமரிப்பற்ற நிலையில் உள்ளது.
தானிப்பாடி குளத்துமேடு பகுதியில் உள்ள இக்கோயில் கடந்த 1847-ல் கட்டப்பட்டது. இதுவரை இக்கோயிலுக்கு எந்த திருப்பணியும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவில் கடந்த 1960-ல் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொள்ளப்பட்டது. தானிப்பாடி மையத்தில் உள்ள இக்கோவில் சுமார் 6.48 ஏக்கர் பரப்பில் உள்ளது. இதன் சர்வே எண்.1032 ஆகும்.
மேலும் மலையடிவாரத்தில் தனியாக 2.8 ஏக்கர் நிலம் கோவிலுக்குச் சொந்தமாக உள்ளது. கோவிலைச் சுற்றிலும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றுக்கு கடந்த 10.4.1960-ஆண்டிலேயே குத்தகைத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவில் பராமரிப்புப் பணி, அறநிலையத்துறை ஆய்வாளர் கட்டுப்பாட்டில் உள்ளது. குத்தகை பாக்கியை சரிவர வசூலிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் கோவிலுக்கும் வருவாய் இருந்தும் இல்லாத நிலையில் உள்ளது.
திருமண தலம்
தானிப்பாடி, நாராயணகுப்பம், நரிப்பள்ளி, புதூர் செக்கடி, மலையனூர் செக்கடி, பீமாராபட்டி, போந்தை, மோத்தக்கல் உள்பட 15 சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் தானிப்பாடி சுப்பிரமணியர் கோவில் திருமண வைபவங்களை நடத்துகின்றனர்.
குத்தகை நிலுவை
கோவில் நிலத்தில் ஏற்கெனவே நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. அவற்றோடு சமூகநலக்கூடம், ஊராட்சி மன்ற அலுவலகம், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் குடியிருப்புகளும் உள்ளன.
ஆனால் யாரும் குத்தகை நிலுவையை தராமல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த 1997-ல் இருந்து குத்தகை நிலுவை உள்ளதாகத் தெரிகிறது.
ரூ.1 கோடியில் மதிப்பீடு
தானிப்பாடி சுப்பிரமணியர் கோவில் புனரமைத்து, திருப்பணி செய்ய ரூ.1 கோடியில் அறநிலையத்துறை மதிப்பீடு தயாரித்து அரசு அனுமதிக்காக அனுப்பி உள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சுப்பிரமணியர் கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்களை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை மீட்டு, குத்தகை பாக்கியை வசூலித்து, திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தவும் தமிழக அறநிலையத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.