முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளில் 64 லட்சம் மரக்கன்றுகள் நட வனத்துறை திட்டம்
திருவண்ணாமலை, ஜன. 20: முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் 64 லட்சம் மரக்கன்றுகளை நட வனத் துறை திட்டமிட்டுள்ளது. புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,
திருவண்ணாமலை, ஜன. 20: முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் 64 லட்சம் மரக்கன்றுகளை நட வனத் துறை திட்டமிட்டுள்ளது.
புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், தமிழக அரசு வனத் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக காடுகளின் பரப்பளவை தற்போதுள்ள 17 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக அதிகரிக்க மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் உதவியுடன் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இயற்கை வளத்தை பாதுகாப்பதில் மிகுந்த ஆர்வமுள்ள முதல்வர் ஜெயலலிதா, கடந்த2001-06-ல் முதல்வராக இருந்த போது மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அதிரடியாக நடைமுறைப்படுத்தினார்.
64 லட்சம் மரக்கன்றுகள்
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் 64-வது பிறந்த நாள் பிப்ரவரி 24-ம் தேதி வருகிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 64 லட்சம் மரக்கன்றுகளை நட வனத் துறை திட்டமிட்டு தீவிரமாக செயலாற்றி வருகிறது.
32 மாவட்டங்களில் தலா 2 லட்சம் மரக்கன்றுகள் வீதம் நடப்பட உள்ளன. இதற்காக அந்தந்த மாவட்டத்தில் மாவட்ட வன அலுவலர்கள் தேவையான மரக்கன்றுகளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சொரகொளத்தூர், செங்கம், ஜமுனாமரத்தூர், போளூர், ஆரணி, சாத்தனூர், சந்தவாசல் உள்பட 8 இடங்களில் மரக்கன்றுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூலம் ஆங்காங்கே உள்ள பொதுஇடங்கள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்படும். மாவட்டத்தில் 8 வனச்சரங்களில் 250 வனத்துறை ஊழியர்கள் இப்பணியில் ஈடுபடுவர்.
பின்னர் அவற்றுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் பணியை பள்ளி, கல்லூரிகள், அமைப்புகள் மேற்கொள்ளும்.
இதே போல ஐந்து ஆண்டுகளும் முதல்வர் பிறந்தநாளன்று இத்திட்டம் மேற்கொள்ளப்படும் என்றும், நடப்படும் மரக்கன்றில் ஒன்று கூட பராமரிப்பு இல்லாமல் போகாத அளவுக்கு இத்திட்டம் கண்காணிக்கப்படும் என்றும் வனத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.