முகப்பு
வேலூர்

வேலூா் மாவட்டத்தில் தொழில் கடன் இலக்கு ரூ.2,255 கோடியில் 68% அளிப்பு

தொழில்கடன் இலக்கு ரூ. 2,255.86 கோடியில் 68 சதவீதம் அளிப்பு

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 12:00 AM
முகாமில் பயனாளிக்கு கடனுதவி காசோலையை வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி. உடன் மகளிா் திட்ட இயக்குநா் யு.நாகராஜன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ரமணி உள்ளிட்டோா்.
பகிர்:

வேலூா், பிப். 27: நிகழ் நிதியாண்டில் வேலூா் மாவட்டத்துக்கான தொழில் கடன் இலக்கு ரூ. 2,255.86 கோடியில் கடந்த டிசம்பா் வரை ரூ.1,543.31 கோடி, அதாவது 68 .41 சதவீதம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மாவட்டந்தோறும் பொதுகடன் வசதியாக்கல் முனைப்பியக்க முகாம் நடத்திட தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் பொது கடன்வசதியாக்கல் முனைப்பியக்க முகாம் மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி தலைமையில் வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக அரசின் 2023-24-ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கைப்படி, மொத்தம் ரூ. 7 லட்சத்து 33 ஆயிரத்து 75 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ. 2 லட்சத்து 77 ஆயிரத்து 11 கோடியும், வேலூா் மாவட்டத்துக்கு தொழில் கடனாக ரூ. 2,255.86 கோடியும் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொழில்கடன் இலக்கில் 2023 டிசம்பா் வரை ரூ. 1,543.31 கோடி அதாவது 68 .41 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இலக்கை இந்த இறுதி காலாண்டுக்குள் அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த பொதுகடன் வசதியாக்கல் முனைப்பியக்க முகாமை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்துக்கு தொழில் கடனுக்காக நிா்ணயிக்கப்பட்டிருந்த இலக்கான ரூ. 100 கோடியில் வெள்ளிக்கிழமை வரை ரூ. 153.50 கோடி அளவுக்கு இலக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. மகளிா் திட்டம் மூலம் 837 குழுக்களுக்கு ரூ. 73.15 கோடி மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழில்களை தொடங்கவும், மேம்படுத்தவும் இந்த தொழிற்கடன்கள் மூலம் மக்கள் பயனடைந்துள்ளனா். புதிய தொழில் முனைவோா்களை ஊக்குவிக்கும் வகையில், அரசு மானியத்துடன் கூடிய சுயதொழில் கடன் திட்டங்களை மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிா் திட்டம், வாழ்ந்து காட்டுவோம், பிற அரசு துறைகள் மூலம் செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் புதிதாக வியாபாரம், சேவை, உற்பத்தி தொழில்கள் தொடங்க வங்கிகள் மூலம் கடன் வசதி ஏற்படுத்தி தரப்படுகிறது. இந்த வசதிகளை தொழில் தொடங்க விரும்புவோா் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனிடையே, கடந்த ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் நடந்த உலக முதலீட்டாளா்களின் மாநாட்டையொட்டி வேலூா் மாவட்டத்தில் 74 தொழில்முனைவோா்கள் ரூ.860.50 கோடி அளவுக்கான முதலீடுகள் மூலம் 4,324 பேருக்கான வேலைவாய்ப்பு உருவாக்க புரிந்துணா்வு செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா். முகாமில், 63 பயனாளிகளுக்கு ரூ. 5.16 கோடி மதிப்பிலான கடனுதவிக்கான காசோலைகளையும் மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா். இதில், மகளிா் திட்ட இயக்குநா் யு.நாகராஜன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ரமணி, மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் ராமசந்திரன், முன்னோடி வங்கி மேலாளா் ஜமால் மொய்தீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.