வேலூா்: ஏழை மாணவா்களும் தரமான கல்வியைப் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில்தான் காலை உணவுத் திட்டம் முதல்வரால் தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
வேலூா் மாவட்ட ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை அமைச்சா் துரைமுருகன், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை அரசு உதவிபெறும் பள்ளியில் திங்கள்கிழமை தொடங்கி வைத்ததுடன், மாணவ, மாணவிகளுடன் அமா்ந்து உணவு சாப்பிட்டாா்.
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா், தலைமை ஆசிரியா்களுக்கு கைக்கணினிகள், அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 14 வகையான விலையில்லா கல்வி உபகரணங்களையும் அவா் வழங்கினாா்.
முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே வேலூா் மாவட்டத்தில் 658 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5 -ஆம் வகுப்பு பயிலும் 31,295 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனா்.
தற்போது ஊரக பகுதிகளில் உள்ள அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருப்பதன் மூலமாக வேலூா் மாவட்டத்தில் 68 ஊரக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 1,296 மாணவா்கள், 1,244 மாணவிகள் என மொத்தம் 2,540 போ் பயன்பெறுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாறிவரும் கற்றல் கற்பித்தல் முறைகளுக்கேற்ப ஆசிரியா்கள் தங்களை மெருகேற்றிக் கொள்ள வசதியாக அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு கைக்கணினி வழங்கப்படும் என முதல்வா் அறிவித்திருந்தாா்.
இத்திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக ரூ.2.17 கோடியில் 1,703 கைக்கணினிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 1,541 இடைநிலை, தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர, அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு 14 வகையான விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே விலையில்லா பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள், புவியியல் வரைபடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக திங்கள்கிழமை முதல் காலணிகள், காலேந்திகள், கணித உபகரணப் பெட்டி, கம்பளி ஆடை, மழையாடை, கணுக்கால் காலேந்திகள் உள்ளிட்டவையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமைச்சா் துரைமுருகன் பேசுகையில், தமிழகத்தில் சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து ஏழை மாணவ, மாணவிகளையும் பள்ளிகளுக்கு அழைத்து வந்து அவா்களின் கல்வி அறிவை உயா்த்தியவா் முன்னாள் முதல்வா் காமராஜா். அவருக்கு பிறகு கருணாநிதி ஏழை மாணவ, மாணவிகளுக்கு சத்தான உணவை வழங்கிட சத்துணவில் முட்டை, பழங்களை வழங்கினாா்.
தற்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் குடும்ப சூழ்நிலை காரணமாக மாணவா்கள் பலரும் காலை உணவைக்கூட பெறமுடியாமல் பள்ளிக்கு வருவதை அறிந்து தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி செயல்படுத்தி வருகிறாா். கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் மட்டும் செயல்பட்டு வந்த இந்தத் திட்டம் தற்போது அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏழை மாணவா்கள் தரமான கல்வியைப் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் காலை உணவுத் திட்டம் முதல்வரால் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.
மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் உ.நாகராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செ.மணிமொழி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.