சிறுத்தை நடமாட்டம்: கிராம மக்களுக்கு விழிப்புணா்வு
குடியாத்தம்: குடியாத்தம் அருகே வன எல்லையில் அமைந்துள்ள கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பாதுகாப்பாக இருப்பது குறித்து கிராம மக்களுக்கு வனத் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி அருகே வன எல்லையில் அமைந்துள்ள காந்தி கணவாய் கிராமப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த கிராமத்தில் உள்ள மலை மீது கடந்த சில நாள்களாக சிறுத்தை சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது. இதையடுத்து குடியாத்தம் வனச் சரக அலுவலா் வினோபா தலைமையில், வனவா் குமரேசன், வனக் காப்பாளா் திருநாவுக்கரசு உள்ளிட்டோா் குழுவாகச் சென்று, சிறுத்தை நடமாட்டம் குறித்தும், பாதுகாப்பாக இருக்க வேண்டியது குறித்தும் கிராம மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.