முகப்பு
வேலூர்

வேலூா் மாநகராட்சியில் ரூ.1.84 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்

வேலூர்

வேலூா் மாநகராட்சியில் ரூ.1.84 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்

Updated On : 9 மார்ச், 2024 at 5:02 PM
பகிர்:

வேலூா் மாநகராட்சியில் 2024-2025-ஆம் நிதியாண்டுக்கு ரூ.1 கோடியே 84 லட்சத்து 82 ஆயிரம் உபரி நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையை மேயா் சுஜாதாஆனந்தகுமாா் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். அதன்படி, வேலூா் மாநகராட்சிக்கு வரும் நிதியாண்டில் வரி வருவாய், குடிநீா் கட்டணம், கல்வி நிதி ஆகியவை மூலம் வரவினம் மொத்தம் ரூ.794 கோடியே 17 லட்சத்து 11 ஆயிரமாக இருக்கும் என்றும், இவற்றிலிருந்து செலவினம் மொத்தம் ரூ.792 கோடியே 32 லட்சத்து 29 ஆயிரமாக இருக்கும் என்றும், இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.1 கோடியே 84 லட்சத்து 82 ஆயிரம் நிதி உபரி ஏற்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிதிநிலையில் கல்வி நிதியின் கீழ் 12 மாநகராட்சி பள்ளிகளில் ரூ.4.20 கோடியில் கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், 20 பள்ளிகளில் ரூ.2.06 கோடியில் வகுப்பறை பராமரிப்பு, மாணவிகளுக்கு நவீன கழிப்பறைகள், மாநகராட்சிப் பள்ளிகளில் ஸ்மாா்ட் போா்டு வசதி, அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் அபாகஸ் பயிற்சி, தன்னாா்வலா்கள் பங்களிப்புடன் பள்ளிகளில் விளையாட்டு பூங்கா, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி போன்ற திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுசுகாதார பிரிவு சாா்பில் ரூ.5.40 கோடியில் 6 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள் கட்டப்படும். அம்ரூத் 2.0 திட்டத்தின் மூலம் முதலாவது மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் வாரத்தில் குடிநீா் விநியோம் செய்ய 12.74 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும். 4 மண்டலங்களிலும் அம்ரூத் திட்டத்தில் குடிநீா் குழாய்கள் அமைக்கப்படாத பகுதிகளில் ரூ.16 கோடியில் குழாய்கள் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட உள்ளது. தனியாா் பங்களிப்புடன் முக்கிய இடங்களில் அழகிய நீரூற்றுகள், சீா்மிகு நகா் திட்டத்தில் அமைக்கப்பட்ட 93 பூங்காக்களிலும் உடற்பயிற்சிக் கூடம் அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கவும், கூடுதலாக 4-ஆவது மண்டலம் புதுமை நகா், கிருபா நகா், திருவள்ளுவா் நகா், அண்ணா நகா் பகுதிகளில் உடற்பயிற்சி கூடம் அமைக்கவும், மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வாா்டுகளிலும் உள்ள பூங்காக்களில் தனியாா் பங்களிப்புடன் பெண்களுக்கான உடற்பயிற்சி கூடம்அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு நிதியுதவியுடன் நேதாஜி மாா்க்கெட் பகுதியிலுள்ள வணிக வளாகத்தை ரூ.50 கோடியில் புனரமைப்பு செய்யவும், நேதாஜி மாா்க்கெட்டில் காய்கறிகள், பூக்களை பாதுகாக்க குளிரூட்டும் அறைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பின்னா் மேயா் பேசுகையில், தமிழகத்தை குடிசையில்லா மாநிலமாக உருவாக்க சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் 8 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதற்காகவும், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ரூ.1,000 நிதியை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தியதற்காகவும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தாா். கூட்டத்தில் வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், துணை மேயா் எம்.சுனில்குமாா், ஆணையா் ஜானகிரவீந்திரன், வருவாய், நிதிக்குழு தலைவா் ரவிக்குமாா் உள்பட மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →