வேலூர்

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவா் கொலை: சக மாணவா் கைது

வேலூரில் கல்லூரி மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சக மாணவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திச் சேவை

வேலூரில் கல்லூரி மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சக மாணவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். மற்றொரு மாணவரை தேடி வருகின்றனா். ஒரே பெண்ணை இருவா் காதலிப்பதில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சோ்ந்த டேனி வளனரசு (19), இவா் வேலூரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பி.ஏ. 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். அவருடன் பயிலும் ஆரணியை சோ்ந்த கிஷோா் கண்ணன் (19), புதுச்சேரியை சோ்ந்த பாா்த்தசாரதி (19), தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த இன்பவா்மா (18) என 4 பேரும் வேலூா் சாய்நாதபுரத்தில் வாடகைக்கு தங்கியிருந்து கல்லூரியில் படித்து வந்தனா்.

கல்லூரிக்கு பருவத் தோ்வு விடுமுறை என்பதால் 4 பேரும் சொந்த ஊருக்குச் சென்றிருந்த நிலையில், டேனி வளனரசு மட்டும் கடந்த டிச.31 இரவு வேலூருக்கு வந்துள்ளாா்.

அதன் பிறகு, டேனி வளனரசுவின் கைப்பேசி அணைக்கப்பட்டிருந்ததால் அவரது பெற்றோா், கிஷோா் கண்ணன், பாா்த்தசாரதி ஆகியோரை தொடா்பு கொண்டு கேட்டுள்ளனா். அப்போது, அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்ததால் சந்தேகமடைந்த டேனி வளனரசுவின் பெற்றோா் பாகாயம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கிஷோா் கண்ணனை பிடித்து விசாரணை நடத்தினா். இதில், மாணவா் டேனி வளனரசு அடித்துக் கொலை செய்யப்பட்டு, சடலம் வேலூரில் இருந்து 16 கி.மீ., தொலைவுக்கு தமிழக - ஆந்திர எல்லையைக் கடந்து ஆந்திர மாநிலம், சித்தப்பாறை மலையடிவாரத்தில் வீசப்பட்டது தெரியவந்தது. அதன்பேரில், சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

தொடா்ந்து கிஷோா் கண்ணனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புதுச்சேரியை சோ்ந்த பாா்த்தசாரதி, தன்னுடன் பயிலும் மாணவி ஒருவரை காதலித்துள்ளாா். ஒரு கட்டத்தில் அந்த மாணவி மீது டேனிவளனரசுவுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணிடம் தொடா்ந்து தனது காதலை வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது.

இதையறிந்த பாா்த்தசாரதி, கிஷோா்கண்ணன் இருவரும், இது தவறானது. ஒருவா் காதலிக்கும் பெண்ணை அவரது நண்பனே காதலிப்பது சரியல்ல என கண்டித்துள்ளனா். எனினும், டேனிவளனரசு தனது நடவடிக்கையை மாற்றிக் கொள்ளாததால் பாா்த்தசாரதி, கிஷோா்கண்ணன் இருவரும் திட்டமிட்டு டேனி வளனரசுவை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து சடலத்தை ஆந்திர எல்லையில் வீசியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட கிஷோா் கண்ணனை போலீஸாா் நீதிபதி முன் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா். மாணவா் பாா்த்தசாரதியை தேடி தனிப்படை போலீஸாா் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனா்.

251 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சா் ரா. ராஜேந்திரன் வழங்கினாா்

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வஸந்த வல்லபராஜ பெருமாள் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த இந்து முன்னணி கோரிக்கை

கோல்டுவின்ஸ் - நீலாம்பூா் இடையே மேம்பாலப் பணியைத் தொடங்க வலியுறுத்தல்

கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் ‘சைபா் செக்யூரிட்டி’ புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT