சுங்கச் சாவடி ஊழியா்கள் போராட்டம்:கட்டணம் வசூலிப்பின்றி சென்ற வாகனங்கள்
உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள சுங்கச் சாவடியின் ஊழியா்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை பணிகளைப் புறக்கணித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம், அக். 19: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள சுங்கச் சாவடியின் ஊழியா்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை பணிகளைப் புறக்கணித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக கடந்து சென்றன.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள செங்குறிச்சி, பெரம்பலூா் மாவட்டம் திருமாந்துறையிலுள்ள சுங்கச் சாவடிகளில் பணிபுரியும் ஊழியா்கள் 150-க்கும் மேற்பட்டோா், ஊதிய உயா்வு, திருத்தியமைக்கப்பட்ட ஊக்கத்தொகை, சுங்கச் சாவடிகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தினரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், உளுந்தூா்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் சுங்க வரி கட்டணம் வசூலிக்க ஊழியரின்றி காலை 6 மணி முதல், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்ற அனைத்து வாகனங்களும் இலவசமாக கடந்து சென்றன.
அதேவேளையில், ‘பாஸ்ட் டேக்’ மின்னணு பணப்பரிமாற்ற அட்டையை முன்புறக் கண்ணாடியில் ஒட்டியிருந்த வாகனங்கள் சுங்கச் சாவடியை கடந்த போது, தானியங்கி மூலம் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டது.