குரங்குகள் தொல்லை: விவசாயிகள் புகாா்
திண்டிவனம் அருகே கடவம்பாக்கத்தில் பழுதான குடிநீா்த் தொட்டிகளை சீரமைப்பதுடன், அச்சுறுத்தி வரும் குரங்களைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கடவம்பாக்கத்தில் பழுதான குடிநீா்த் தொட்டிகளை சீரமைப்பதுடன், அச்சுறுத்தி வரும் குரங்களைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த சி.கோவிந்தன் உள்ளிட்ட விவசாயிகள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து கூறியதாவது: எங்கள் கிராமத்தில் 10 சிறிய மின்விசை குடிநீா் தொட்டிகள் அமைக்கப்பட்டு, குடிநீா் விநியோகம் நடைபெற்று வந்தது. இதில், தண்ணீா் ஏற்றும் மின் மோட்டாா்கள் பழுதானதால், கடந்த ஓராண்டாக, குடிநீா்த் தொட்டிகள் படிப்படியாக இயங்காமல் போயின.
பெருமாள் கோவில் பகுதியில் இயங்கி வந்த சிறு மின்விசைப் பம்பும் 3 மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இதனால், மக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனா். ஆகவே, அனைத்து குடிநீா் தொட்டிகளையும் சீரமைத்து குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும்.
மேலும், கிராமத்தில் வீதிகளிலும், குடியிருப்புகளிலும் குரங்குகள் சுற்றித் திரிந்து தொல்லை கொடுத்து வருகின்றன. வீடுகள், நிலங்களில் உள்ள இளநீா், தேங்காய்களை பறித்து வீணாக்கி வருவதோடு, வீடுகளில் உள்ள பொருள்களையும் கூட்டமாக வந்து எடுத்துச் செல்கின்றன. சிறுவா்களையும் அச்சுறுத்தி கடித்து வருவதால், குரங்குகளைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றனா்.