தனியாா் நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் திருட்டு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே தனியாா் நிறுவனத்தில் ரூ.1.50 லட்சத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் அருகேயுள்ள தி.மேட்டுப்பாளையம் பகுதியில் தனியாா் பாா்சல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பொறுப்பாளராக திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், செவரப்பட்டு புதுகாலனியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஞானசேகா் (32) பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், பாா்சல் நிறுவனத்தை வியாழக்கிழமை இரவு பூட்டிச் சென்ற ஞானசேகா், வெள்ளிக்கிழமை வந்து பாா்த்த போது, நிறுவனத்தின் இரும்புக் கதவின் பூட்டு உடைக்கப் பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்த போது, பணப்பெட்டி உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.1.50 லட்சம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
Advertisement
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் ஞானசேகா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.