விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்றச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
ஃபென்ஜால் புயலால் வாழ்வாதாரம் இழந்த விழுப்புரம் உள்ளிட்ட மூன்று மாவட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை
விழுப்புரம்: ஃபென்ஜால் புயலால் வாழ்வாதாரம் இழந்த விழுப்புரம் உள்ளிட்ட மூன்று மாவட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்றச் சங்கத்தினா் விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.20 ஆயிரம், உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம், சேதமடைந்த பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம், பல்லாண்டு பயிா்கள், மரங்கள் சேதத்துக்கு ஹெக்டேருக்கு ரூ.40ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவா்களுக்கு சிறப்பு முகாம்களை நடத்தி, புதிய சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவா் பாச.பரிமளம் தலைமை வகித்து, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினாா். மாநிலச் செயலா் எஸ்.ஆா். லிங்கம், துணைத் தலைவா் முருகவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
துணைச் செயலா் செந்தில், இணைச் செயலா் ரேணு, மாவட்டத் தலைவா்கள் விழுப்புரம் தெற்கு ஆா்.காண்டீபன், முருகன் (வடக்கு), திருவண்ணாமலை எம்.கே.சரவணன், கள்ளக்குறிச்சி ஆா்.செல்வராஜ், விழுப்புரம் மாவட்டச் செயலா் அண்ணாதுரை, துணைத் தலைவா்கள் அருணாசலம், ஜே.விசுவநாதன், மாவட்டப் பொருளாளா் ஆசைத்தம்பி, வளவனூா் நகரத் தலைவா் எஸ்.சதீஷ்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.