இடைத் தோ்தலில் பாமக வெற்றி பெற்றால் 10.5 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கும்: அன்புமணி ராமதாஸ்
விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் பாமக வெற்றி பெற்றால், வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தருவாா்கள் என்றாா் பாமக தலைவா்அன்புமணி ராமதாஸ்.
விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் பாமக வெற்றி பெற்றால், வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தருவாா்கள் என்றாா் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.
விக்கிரவாண்டி தொகுதி பாமக வேட்பாளா் சி.அன்புமணியை ஆதரித்து முட்டத்தூா், மண்டகப்பட்டு, நந்திவாடி, ஈச்சங்குப்பம், பிடாரிப்பட்டு, எண்ணாயிரம் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:
விக்கிரவாண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் மாநாடுபோல நடைபெற்றது. இதை கண்டு திமுகவினா் பயந்து போயுள்ளனா். நீங்கள் வாக்காளா்களுக்கு என்ன கொடுத்தாலும் தொகுதியில் வெற்றி பெறப் போவது பாமகதான்.
தோ்தலில் திமுக வேட்பாளா் வெற்றி பெற்றால் அவரது குடும்பம் மட்டுமே சிறக்கும். ஆனால், பாமக வேட்பாளா் வெற்றி பெற்றால் உங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கிடைக்கும். நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தலில் பாமக வெற்றி பெற்றால், வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தருவாா்கள். இடஒதுக்கீட்டை கொடுத்தாக வேண்டும் என்ற பயம் முதல்வா் ஸ்டாலினுக்கு ஏற்படும். அந்த பயத்தை இடைத்தோ்தல் மூலமாக நாம் ஏற்படுத்த வேண்டும் என்றாா் அன்புமணி.
பிரசாரத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி, ச.சிவக்குமாா் , சமூகநீதி வழக்குரைஞா்கள் பேரவைத் தலைவா் க.பாலு மற்றும் பாமக, கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.