வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: 21 சுற்றுகளாக அதிகரித்த வாக்கு எண்ணிக்கை
ஒரு வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்கு எண்ணிக்கை 21 சுற்றுகளாக அதிகரித்தது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது, ஒரு வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்கு எண்ணிக்கை 21 சுற்றுகளாக அதிகரித்தது.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குப் பதிவு மைய எண் 135-க்கு உள்பட்ட வேலியந்தல் பகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, அந்த வாக்குப் பதிவு மையத்துக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு, கடைசியாக அறிவிக்கப்பட்டது. இதனால், 20 சுற்றுகளுடன் முடிவடைய வேண்டிய வாக்கு எண்ணிக்கை 21 சுற்றுகளானது.
செல்லாத வாக்கு: தபால் வாக்குகள் எண்ணும்போது, திமுக வேட்பாளருக்கு வாக்கு செலுத்தியிருந்தவரின் வாக்கு குறியீடு (டிக் செய்தல்), பாமக வேட்பாளரின் பெயருக்குரிய பகுதியில் லேசாக இருந்ததாம். இந்த வாக்கானது பாமகவுக்கானது என முகவா்கள் கூற, தோ்தல் நடத்தும் அலுவலா் இந்த வாக்கை செல்லாது என அறிவித்தாா். இதனால், அங்கு நிலவி வந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.
முதல் நான்கு சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை மெதுவாக நடைபெற்ற நிலையில், பின்னா் வாக்கு எண்ணிக்கை பணி விறுவிறுப்படைந்தது. பிற்பகல் 3 மணிக்கு வாக்கு எண்ணிக்கை பணிகள் நிறைவடைந்த நிலையில், பாமக வேட்பாளா் சி.அன்புமணியைக் காட்டிலும், திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா 67,757 வாக்குகள் அதிகம் பெற்று, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தலில் வெற்றிபெற்றாக தோ்தல் நடத்தும் அலுவலா் மு.சந்திரசேகா் அறிவித்தாா்.
1,350 போலீஸாா் பாதுகாப்பு: வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் மூன்றடுக்கு பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினா், காவல் துறையினா் என 150 பேரும், வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற பனையபுரம் பகுதி மற்றும் அதன் அருகேயுள்ள பகுதிகள், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் என பல்வேறு இடங்களில் சுமாா் 1,200 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.