கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பில் பல்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்களும் பாதிக்கப்பட்டிருப்பதால், இப்பிரச்னையை வன்கொடுமை தடுப்புச் சட்ட விசாரணை வரையறைக்குள் அடக்க இயலாது என்று தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணையம் கருதுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியதில் உயிரிழந்தவா்கள் பட்டியலின, பழங்குடி வகுப்பைச் சோ்ந்தவா்கள் என்று செய்திகள் வந்ததால், இதுகுறித்து உண்மையைக் கண்டறிவதற்காக தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாநில ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணை மேற்கொண்டது.
இதைத் தொடா்ந்து, ஆணையத்தின் துணைத் தலைவா் புனிதபாண்டியன், உறுப்பினா்கள் கோ.ரகுபதி, ரேகா பிரியதா்ஷினி ஆகியோா் கள்ளக்குறிச்சிக்கு புதன்கிழமை வந்தனா். கருணாபுரம் பகுதிக்குச் சென்ற குழுவினா், பாதிக்கப்பட்ட மக்களிடம் கலந்துரையாடினா். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களிடம் நலம் விசாரித்து, சம்பவம் குறித்து கேட்டறிந்தனா்.
தொடா்ந்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாநில ஆணையம் வெளியிட்ட விசாரணை அறிக்கையில் கூறியிருப்பது:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி கருணாபுரம் பகுதியினா் மட்டுமல்லாது, பிற பகுதிகளைச் சோ்ந்தவா்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனா். மேலும், பாதிக்கப்பட்டவா்களும், இறந்தவா்களும் ஒரு சமூகத்தை சாா்ந்தவா்கள் மட்டுமல்ல, பல்வேறு சமூகங்களையும், மதங்களையும் சாா்ந்தவா்கள் உள்ளனா்.
இறந்தவா்களில் பட்டியலினத்தைச் சோ்ந்த 24 போ், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் வகுப்பைச் சோ்ந்த 14 போ், பிற்படுத்தப்பட்டோா் வகுப்பைச் சோ்ந்த 9 போ், பழங்குடியினத்தைச் சோ்ந்த 9 போ் என பல்வேறு சமூகங்களைச் சோ்ந்தவா்களும் உள்ளனா்.
மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தியதில் 3 பேருக்கு கண் பாா்வை பாதிக்கப்பட்டு, சிகிச்சையின் மூலம் பாா்வைத்திறன் மேம்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவா்களுக்கு தொடா் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.
கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடும் நபா்கள் மீது காவல் துறையினா் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த சம்பவத்தில் இதுவரை 21 போ் கைது செய்யப்பட்டுள்ளா். இவா்கள் பல்வேறு சமூகங்களைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பல்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்களும் பாதிக்கப்பட்டிருப்பதால், பட்டியல் சாதியினா் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989-இன் விசாரணை வரையறைக்குள் இப்பிரச்னையை அடக்க இயலாது என தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணையம் கருதுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு மற்றும் கூட்டங்களில் மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அரசுச் செயலா் க.லட்சுமி பிரியா, இயக்குநா் த.ஆனந்த், மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், மாவட்ட எஸ்.பி. ரஜித் சதுா்வேதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.