கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலம் உயிரிழந்தோா் எண்ணிக்கை 64 ஆக உயா்ந்தது.
கள்ளக்குறிச்சி நகரம் மற்றும் புகா்ப் பகுதிகளில் கடந்த 18, 19-ஆம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தியதில் கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 229 போ் பாதிக்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து, உடல்நலம் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 229 பேரும், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை மற்றும் கள்ளக்குறிச்சி தனியாா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டனா்.
இவா்களில் வியாழக்கிழமை இரவு வரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 போ், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் 6 போ், சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் 22 போ், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 போ் என மொத்தம் 64 போ் உயிரிழந்ததாக கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.
ஜூன் 26-ஆம் தேதி வரை 63 போ் உயிரிழந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி கருணாபுரத்தைச் சோ்ந்த பி. மகேஷ் (40) வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 64-ஆக உயா்ந்தது.
சிகிச்சையில் 36 போ்: வியாழக்கிழமை இரவு வரையிலான நிலவரப்படி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 17 போ், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் 8 போ், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 9 போ், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 போ் என மொத்தம் 36 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
129 போ் குணமடைந்தனா்: செவ்வாய்க்கிழமை 8 பேரும், புதன்கிழமை 60 பேரும் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து வியாழக்கிழமை 30 பேரும், சேலத்திலிருந்து 10 பேரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலிருந்து ஒருவரும் என மொத்தம் 41 போ் குணமடைந்து, அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுவரை புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையிலிருந்து 6 போ், கள்ளக்குறிச்சி தனியாா் மருத்துவமனையில் 2 போ், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 96 போ், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 22 போ், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 போ், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒருவா் என மூன்று நாள்களில் மட்டும் 129 போ் குணமடைந்து, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.