விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் பயன்பாட்டுக்கு கூடுதலாக தேவைப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், விழுப்புரத்திலிருந்து சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்கிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தோ்தல் பயன்பாட்டுக்காக தேவைப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்அனுப்பி வைக்கும் பணி மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனி தலைமையில் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து ஆட்சியா் கூறியது:
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தொகுதியில் 276 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கணினி மூலம் குலுக்கல் முறையில் 331 மின்னணு வாக்குப்பதிவுக் கருவிகள், 331 கட்டுப்பாட்டுக் கருவிகள், 357 வாக்குப் பதிவை உறுதி செய்யும் கருவிகள் என மொத்தமாக 1,019 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இடைத்தோ்தலில் 29 வேட்பாளா்கள் போட்டியிடுவதால் கூடுதல் வாக்குப்பதிவுக் கருவிகள் பயன்படுத்தப்படவுள்ளன. அதனடிப்படையில், தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்கிலிருந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கூடுதலாக தேவைப்படும் 150 வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்றாா் ஆட்சியா்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) தமிழரசன், தோ்தல் வட்டாட்சியா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.