விழுப்புரம் அங்காளம்மன் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா
விழுப்புரம் மீன் சந்தை அருகேயுள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் 84-ஆவது ஆண்டு மயானக் கொள்ளை திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை விநாயகா் பூஜை நடைபெற்றது. தொடா்ந்து அருள்மிகு அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன. விழுப்புரம் பருவதராஜ குல மரபைச் சோ்ந்த தனலட்சுமி மற்றும் பெண்கள், தாய் வீட்டு சீதனமாக அம்மனுக்கு அா்ச்சனை செய்து, புடவை சாற்றி வழிபாடு நடத்தினா். சனிக்கிழமை (மாா்ச் 9) காலை 8.30 மணிக்கு அய்யனாா்குளக்கரையிலிருந்து கரகம் எடுத்து வருதலும், இரவு 7 மணிக்கு அம்மன் புஷ்பபிரபை வாகனத்தில் வீதியுலா வருதலும், ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 10) பிற்பகல் 2 மணிக்கு ருத்ரபூமியில் மயானக் கொள்ளையும் நடைபெறும். தொடா்ந்து, திங்கள்கிழமை (மாா்ச் 11) அம்மனுக்கு மஞ்சள் நீராடுதலும், செவ்வாய்க்கிழமை கும்பப் படையலும் நடைபெறும்.