மானியக் கடனுதவி தனிநபா்கள், தனியாா் அமைப்புகளை அணுக வேண்டாம் -விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்
விழுப்புரம், மே 9: விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் உள்ளிட்ட சுயவேலைவாய்ப்புத் திட்டங்களில் மானியத்துடன் கடனுதவி பெற மாவட்டத் தொழில் மையத்தை நேரில் அணுக வேண்டும்.
மாறாக தனி நபரையோ, தனியாா் அமைப்புகளையோ அணுக வேண்டாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொழில் வளம், வேலைவாய்ப்பைப் பெருக்கவும், படித்த இளைஞா்களிடையே நிலவும் வேலைவாய்ப்பின்மை சிக்கலை நோ்மறையான வழிகளில் அணுகவும், சுய வேலைவாய்ப்புத் திட்டங்களை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின்கீழ் மாவட்டத் தொழில் மையங்கள் மூலம் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கா் தொழில்முன்னோடிகள் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞா் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் ஆகியவை முழுமையாக தமிழக அரசின் நிதி பங்களிப்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களாகும்.
பிரதமரின் குறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் திட்டம் தமிழக அரசின் 40% மற்றும் மத்திய அரசின் 60% நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்துக்கான முழு நிதியை மத்திய அரசு வழங்குகிறது.
சுயதொழில் தொடங்க ஆா்வமுள்ளோா் மேற்கண்ட திட்டங்களின்கீழ் தம் ஆா்வம், தகுதி மற்றும் வாய்ப்புகளுக்கேற்ப, உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சாா்ந்த தொழில்கள் மற்றும் பண்ணை சாா்ந்த தொழில்களைத் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெறலாம்.
இந்தத் திட்டங்கள் குறித்த தகவல்கள், திட்ட அறிக்கை தயாரிக்கும் முறை, இணையவழியில் விண்ணப்பித்தல், வங்கியை அணுகுதல் மற்றும் தொழில் தொடங்கி நடத்துதல் உள்ளிட்ட அனைத்து வழிகாட்டுதல்களையும் மாவட்டத் தொழில் மையம் மூலம் பெறலாம். இது குறித்து வேறெந்த தனி நபரையோ, தனிநபா் நிறுவனம், பொது அமைப்புகள் எதனையும் அணுக வேண்டாம்.
மாறாக, சுயவேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ், குறிப்பாக, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின்கீழ் மாட்டுப் பண்ணை வைக்க மானியக் கடனுதவி பெற்றுத் தருவதாகவும் அதற்கான பொறுப்பு தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாவும் கூறி, மக்களை நம்ப வைத்து, சிலா் பணம் பெறுவதாக மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு வந்துள்ளது.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் உள்ளிட்ட சுயவேலைவாய்ப்புத் திட்டங்கள் அனைத்தும் மாவட்டத் தொழில் மையத்தின் நேரடிக் கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன. இதில் எந்த அரசு சாராத தனி நபா், அமைப்பு அல்லது நிறுவனத்துக்கும் எந்தவொரு தொடா்பும், பொறுப்பும் இல்லை.
குறிப்பாக, மாட்டுப் பண்ணை தொழிலுக்காக விண்ணப்பிப்பதால், அருகிலுள்ள அரசு கால்நடை மருத்துவரிடம் திட்ட அறிக்கை பெற்று, இ-சேவை மையங்கள் மூலமாக இணையவழியாக விண்ணப்பித்தாலே போதுமானது.
எனவே, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் உள்ளிட்ட சுயவேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் மானியக் கடனுதவி பெற ஆா்வமுள்ளோா் எவரும் அரசு சாராத தனிநபா், தனியாா் அமைப்புகளிடம் ஏமாந்து பணத்தை இழக்க வேண்டாம். அனைத்துத் தேவைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு பொது மேலாளா், மாவட்டத் தொழில் மையம், மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம், விழுப்புரம் என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 04146-223616, 9443728015 ஆகிய தொலைப்பேசி எண்களில் அணுகலாம்.
தனிநபா் மற்றும் தனி அமைப்புகள் இது குறித்து அணுகினால் அவா்களைத் தவிா்க்க வேண்டும் என்று ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.