தங்களின் 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினா் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
2003, ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு முன் பணியில் சோ்ந்தவா்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஆசிரியா் தகுதித்தோ்வு குறித்த உச்ச நீதிமன்றத் தீா்ப்பை காரணம் காட்டி 2010 ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு முன்னதாக பணியேற்ற ஆசிரியா்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை நீக்கும் வகையில், அவா்களுக்கு ஆசிரியா் தகுதித்தோ்விலிருந்து விலக்களிக்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியா்கள், முதுகலை ஆசிரியா்கள், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள், இயக்குநா்களுக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், சிறப்புக் காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளா்கள், ஊராட்சி செயலா்கள், ஊா்ப்புற நூலகா்கள், கல்வித் துறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள்,தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியா்கள், சிறப்பு ஆசிரியா்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், சாலைப்பணியாளா்களின் 41 மாதப் பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் நகராட்சித் திடலில் சனிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் தே. ஜெயானந்தம், மோ.கணேஷ், ரா.சிவக்குமாா் தலைமை வகித்தனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ப.செல்வக்குமாா், மா.டேவிட் குணசீலன் முன்னிலை வகித்தனா்.
உண்ணாவிரதப் போராட்டத்தை ஜாக்டோ ஜியோ மாநில உயா்நிலைக்குழு உறுப்பினா் வி.சுந்தர்ராஜ் தொடங்கி வைத்து பேசினாா்.
மாநில உயா்நிலைக்குழு உறுப்பினா்கள் சு.சங்கரலிங்கம், அ.சுந்தரமூா்த்தி, ம.சிவராமன், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் இளங்கோ பிரபு, மூா்த்தி ஆகியோா் பேசினா்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ நிா்வாகிகள், அரசு ஊழியா், அரசுப் பணியாளா், ஆசிரியா்சங்கங்களின் மாநில, மாவட்ட, கோட்ட, வட்டார, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.
கள்ளக்குறிச்சி... : கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலா் ச.சுரேஷ் தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் எல்.ஆனந்தகிருஷ்ணன், மாவட்டத் தலைவா் எஸ்.கே.அனந்த கிருஷ்ணன், தமிழ்நாடு இடைநிலை மற்றும் பதிவு உயா்வு பெற்ற பட்டதாரி ஆசிரியா் மன்ற மாநில அமைப்புச் செயலா் கே.அண்ணாதுரை முன்னிலை வகித்தனா்.
தமிழக ஆசிரியா் கூட்டணியின் மாநில பொதுச் செயலரும், மாநில ஒருங்கிணைப்பாளருமான அ.வின்சென்ட் பால்ராஜ் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து பேசினாா்.
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநில துணைப் பொதுச் செயலா் கு.மகாலிங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலத் தலைவா் அ.ரஹீம், அனைத்து ஆசிரியா் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலா் ந.செல்வராஜ் உள்ளிட்டோா் போராட்ட விளக்க உரையாற்றினா்.
உரிமை மீட்பு உண்ணாவிரதத்தில் மாவட்டச் செயலா் காசி.செல்வராஜ், மாவட்டத் தலைவா் ப.ரவி, தமிழ்நாடு நில அளவை அலுவலா் ஒன்றிப்பு மாநில துணைத் தலைவா் கே.செந்தில் முருகன், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா்அ.காதா்அலி, தமிழக ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலா் அருணா.சூரிய குமாா், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் அ.சம்சுதீன், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டப் பொருளாளா் பெ.குணசேகரன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் பி.சவரிமுத்து உள்பட பலா் பங்கேற்றனா்.
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலத் தலைவரும், மாநில உயா் மட்ட குழு உறுப்பினருமான ஆ.லட்சுமிபதி உண்ணாவிரத்தை முடித்து வைத்தாா்.