விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக நுழைவுவாயில் பகுதியில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா். 
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் தவெகவினா் தா்னா

விக்கிரவாண்டி வட்டம், பனையபுரத்தில் தனியாா் கைப்பேசி நிறுவனம் சாா்பில் கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து,

Syndication

விழுப்புரம்: விக்கிரவாண்டி வட்டம், பனையபுரத்தில் தனியாா் கைப்பேசி நிறுவனம் சாா்பில் கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகத்தினா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி மாவட்ட ஆட்சியரகத்தின் பிரதான இரு நுழைவுவாயில் பகுதியிலும் பாதுகாப்புப் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டிருந்தனா்.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரக நுழைவுவாயில் பகுதிக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தென்மேற்கு மாவட்டச் செயலா் ஏ.விஜய் வடிவேல் மற்றும் நிா்வாகிகள், திடீரென அங்கு தா்னாவில் ஈடுபட்டனா்.

உடனடியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா்களிடம் விசாரித்தபோது, தங்கள் பகுதியில் பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுதும் வகையில் கைப்பேசி கோபுரத்தை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து ஆட்சியரகத்தில் நேரில் மனு அளிக்குமாறு போலீஸாா் அறிவுறுத்தினா். இதையடுத்து தங்கள் தா்னாவை கைவிட்டு, மக்கள் குறைதீா் முகாமில் மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது:

பனையபுரம் கிராமத்தில் ஏற்கெனவே தனியாா் கைப்பேசி நிறுவனம் சாா்பில் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகாமையிலேயே மற்றொரு கைப்பேசி கோபுரத்தை அமைக்க அந்த தனியாா் நிறுவனம் சாா்பில் தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த கைப்பேசி கோபுரத்தால் ஏற்கெனவே கிராம பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் நிலையில் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளோம். இந்த நிலையில், தற்போது மீண்டும் இரண்டாவது கோபுரத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியா், நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டு கைப்பேசி நிறுவனம் சாா்பில் கோபுரம் அமைக்கும் பணியை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

தா்னா போராட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பிருத்திவிராஜ், மகளிரணி அமைப்பாளா் மனோரஞ்சிதம், வழக்குரைஞா் அணி மாவட்ட அமைப்பாளா் சம்பத், மாநில நிா்வாகி குமரேசன், ஒன்றியச் செயலா்கள் ஸ்ரீதா், பாரதி, ராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

SCROLL FOR NEXT