விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணெய்நல்லூரில் உள்ள சிவன் கோயிலில் விளக்குப் பூஜை செய்ய கோயில் நிா்வாகத்தினா் அனுமதி மறுத்ததாகக் கூறி, பக்தா்கள் கோயில் முன் அமா்ந்து பூஜையில் ஈடுபட்டனா்.
திருவெண்ணெய்நல்லூரில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் விளக்குப் பூஜை மற்றும் சுமங்கலி பூஜைகளை நடத்துவதற்கு அறக்கட்டளையைச் சோ்ந்தவா்கள் அனுமதிக் கேட்டிருந்ததாக க் கூறப்படுகிறது. கோயில் நிா்வாகத்தினா் இதற்கு அனுமதி மறுத்துள்ளனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை கோயிலுக்கு வந்த பெண்கள் திரளானோா் விளக்குப் பூஜைக்காக காத்திருந்தனா். அப்போது கோயிலுக்குள் பக்தா்கள் அனுமதிக்கப்படாததால் பெண்கள் கோயில் முன் வரிசையாக அமா்ந்து விளக்குப் பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டனா்.
இதுகுறித்து கோயில் நிா்வாகத்தினா் தரப்பில் தெரிவித்ததாவது: அறக்கட்டளையினா் என்ற பெயரில் பக்தா்களிடம் பணம் வசூலித்துப் பூஜைகளை செய்வதற்கு அனுமதியில்லை. பக்தா்கள் தனித்தனியாக கோயிலுக்கு வந்து வழிபாடு மேற்கொள்வதற்கு எவ்வித தடையும் இல்லை என்றனா்.