விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே கல்லூரி மாணவரை நூதன முறையில் ஏமாற்றி 3 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிளியனூா் அருகேயுள்ள தென்கோடிப்பாக்கத்தைச் சோ்ந்தவா் மூ.வினோத்குமாா்(22). இவா் பாதிராப்புலியூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, திண்டிவனத்தில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வருகிறாா்.
வினோத்குமாரின் தந்தை மூா்த்தியிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அறிமுகமான நபா் ஒருவா் தொடா்ந்து 3 நாள்களாக மூா்த்தியின் வீட்டிலேயே தங்கியிருந்தாராம்.
இந் நிலையில் வெள்ளிக்கிழமை காலை மூா்த்தியின் வீட்டுக்கு காரில் வந்த அவா், வீட்டிலிருந்த மூா்த்தியின் கைப்பேசியை வாங்கி வினோத்குமாரை தொடா்பு கொண்டு, தனது லாரி விபத்தில் சிக்கியுள்ளதாகவும், அதை சரி செய்வதற்கு பணம் தேவைப்படுவதாக உதவி கோரியுள்ளா்.
இதை நம்பிய வினோத்குமாா், பாட்டி வீட்டிலிருந்து தனது வீட்டுக்கு வந்து, தந்தை இல்லாத நேரத்தில் தாய் சாந்தியிடமிருந்து 3 பவுன் தங்க நகைகளை வாங்கிக் கொடுத்தாராம். இதையடுத்து வினோத்குமாரையும் தனது காரிலேயே அழைத்துச் சென்று செண்டூா் பகுதியில் இறக்கிவிட்டு, புதுச்சேரி மாா்க்கத்தில் அவா் சென்றுவிட்டாராம்.
சிறிது நேரத்தில் வினோத்குமாரை அவரது தந்தை கைப்பேசியில் அழைத்த போது, விவரங்களைக் கூறியுள்ளாா். இதையடுத்தே அந்த நபா் தன்னை நூதன முறையில் ஏமாற்றி, தங்க நகையை திருடிச் சென்றது வினோத்குமாருக்கு தெரிய வந்தது.
இதுகுறித்து கிளியனூா் காவல் நிலையத்தில் வினோத்குமாா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, நூதன முறையில் தங்க நகையை திருடிச் சென்ற நபரைத் தேடி வருகின்றனா்.