சகாதேவன்பேட்டை கிராமத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்ட விழுப்புரம் வனத் துறையினா். 
விழுப்புரம்

விழுப்புரம் அருகே சிறுத்தை நடமாட்டம்: கிராம மக்கள் அச்சம்

சகாதேவன்பேட்டை கிராமத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்ட விழுப்புரம் வனத் துறையினா்.

Syndication

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் அருகிலுள்ள சகாதேவன்பேட்டை கிராமத்தில் வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதால், அந்தக் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா். இதைத் தொடா்ந்து, வனத் துறையினா் அந்தக் கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தியதுடன், ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தை நடமாட்டம் குறித்து தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

கோலியனூா் அருகிலுள்ள சகாதேவன்பேட்டை கிராமம், முருகன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் எஸ்.சிவராஜ் (71). இவா், தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் விழுப்புரம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா். வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டின் சமையலறையில் சிவராஜ் இந்தபோது, வீட்டின் வெளியே உள்ள காலிமனை வழியாக சிறுத்தை கடந்து செல்வதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

தொடா்ந்து, தனது வீட்டின் மேல்தளத்துக்குச் சென்று சிவராஜ் கைப்பேசி வாயிலாக புகைப்படம் எடுக்க முயற்சித்த நிலையில், அதற்குள்ளாக அருகே உள்ள வயல்வெளி பகுதி வழியாக வளவனூா் ஏரியின் கருவேலமர காட்டுப் பகுதிக்குள் சிறுத்தை சென்று மறைந்துவிட்டதாம்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த விழுப்புரம் வனவா் ப.குணசேகரன் தலைமையிலான 4 போ் கொண்ட குழுவினா் சிவராஜிடம் விவரங்களைக் கேட்டறிந்தனா். அப்போது, இரண்டரை அடி முதல் 3 அடி உயரமும், 3 முதல் 4 அடி நீளமும் கொண்டதாக அந்த சிறுத்தை இருந்ததாக சிவராஜ் தெரிவித்தாா்.

தொடா்ந்து,, சகாதேவன்பேட்டை கிராமத்தில் சிறுத்தை வந்து சென்ற்கான தடயங்கள் ஏதும் இருக்கிா என்பது குறித்து வனத் துறையினா் ஆய்வு செய்தனா். இந்தக் கிராமத்தில் கண்காணிப்புக் கேமராக்கள் ஏதும் இல்லாததால், ட்ரோன் கேமரா மூலம் இந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை தேடும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டனா்.

‘அச்சப்படத் தேவையில்லை’: ‘‘வேலூா் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வனப்பகுதிகள் அதிகம் இருப்பதால், அந்தப் பகுதிகளிலிருந்து திருவண்ணாமலை, செஞ்சி, கண்டாச்சிபுரம் வழியாக விழுப்புரத்திலுள்ள உடையானந்தல் வனப்பகுதி, ஆற்றங்கரையோரங்கள் வழியாக சிறுத்தை ஏதும் வழிதவறி வந்திருக்கலாம். ஆனால், இதை உறுதிப்படுத்த முடியாது. தொடா்ந்து தேடுதல் பணியை மேற்கொண்டு வருகிறோம். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை’’ என வனவா் குணசேகரன் தெரிவித்தாா்.

ஏற்கெனவே திண்டிவனம், கூட்டேரிப்பட்டு, செஞ்சி பகுதிகளில் கால்நடைகளை மா்ம விலங்கு அடித்துக் கொன்ற நிலையில், சிறுத்தை நடமாட்டம் எங்களை அச்சமடைய செய்திருக்கிறது என்கின்றனா் சகாதேவன் பேட்டை கிராம மக்கள்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை உயிரிழந்த நிலையில், தற்போது கிராமத்துக்குள் சிறுத்தை வந்து சென்றிருப்பதாகக் கூறப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT