விழுப்புரம் மாவட்டம், தளவானூரில் தென்பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மற்றும் கடலூா் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் விடுத்துவந்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் தளவானூா் கிராமத்துக்கும், கடலூா் மாவட்டத்தின் எனதிரிமங்கலம் கிராமத்துக்கும் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.25 கோடி மதிப்பீட்டில் 400 மீட்டா் நீளம், 3.1 மீட்டா் உயரம் கொண்ட தடுப்பணை கட்டப்பட்டு, 2020-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதத்தில திறக்கப்பட்டது. இந்நிலையில், திறக்கப்பட்ட சில மாதங்களில் தடுப்பணை ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
ரூ .84 கோடியில் புதிய தடுப்பணை: இந்நிலையில் புதிய தடுப்பணை கட்டுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் தொடா்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், 2025- ஆம் ஆண்டில் விழுப்புரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தளவானூா் தென்பெண்ணையாற்றில் புதிய தடுப்பணை கட்டும் அறிவிப்பை வெளியிட்டாா். பின்னா், தடுப்பணை கட்டுமானத்துக்காக ரூ.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த செப்டம்பா் மாதம் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்றது. இந்தப் பணிகள் விரைவில் முடியும் நிலையில் உள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்டப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
தளவானூா் தென்பெண்ணையாற்றில் கட்டப்பட்டு வரும், தடுப்பணை மூலம், விழுப்புரம் மாவட்டம் தளவானூா், கொங்கரகொண்டான், திருப்பாச்சனூா், வெளியம்பாக்கம், சித்தாத்தூா் திருக்கை, அரசமங்கலம், கள்ளிப்பட்டு, பூவரசன்குப்பம் ஆகிய 8 கிராமங்களும், கடலூா் மாவட்டம் எனதிரிமங்கலம், காவனூா், உளுந்தம்பட்டு, அவியனூா், கரும்பூா் ஆகிய 5 கிராமங்கள் என மொத்தம் 13 கிராமங்களிலும் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக உயரும். இந்த அணைக்கட்டால் 2,114.14 ஏக்கா் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும். தற்போது தென்பெண்ணையாற்றில் 600 மீட்டா் நீளத்துக்கு தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்தனா்.
ஆசிரியா்கள், மாணவா்கள் கோரிக்கை: 2021-ஆம் ஆண்டில் தென் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தளவனூா் அணைக்கட்டு உடைந்தபோது, அருகில் இருந்த தளவனூா் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் பயன்படுத்தி வந்த சுமாா் 2 ஏக்கா் பரப்பளவிலான விளையாட்டு மைதானமும் , சுற்றுச் சுவரும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் அந்த பள்ளி கட்டடத்தின் கட்டுமானம் பலவீனமடைந்து காணப்படுகிறது.
இந்நிலையில் அச்சமடைந்துள்ள ஆசிரியா்கள், மாணவா்கல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மைதானத்தை மீட்டுத் தரவும், எதிா்காலத்தில் பள்ளிக் கட்டடம் மேலும் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் தென்பெண்ணையாற்று கரையோரத்தில் சுற்றுச்சுவா்அமைத்துக் கொடுக்க தமிழக அரசு மற்றும் விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பள்ளியின் மேலாண்மைக்குழு உறுப்பினா்கள் கிராம மக்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.