உயிரிழந்த ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி மறியல்
விழுப்புரம்உயிரிழந்த ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி மறியல்
விழுப்புரம் ரயில் நிலையத்தில் பணியிலிருந்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினா்கள் விழுப்புரத்தில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரா.மணிகண்டன் (38). ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளியான இவா், புதன்கிழமை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதுச்சேரி- மங்களூா் வாராந்திர விரைவு ரயில் பெட்டிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
உறவினா்கள் சாலை மறியல்: இந்நிலையில் மணிகண்டனின் உறவினா்கள் முறையான பாதுகாப்பு செய்து தராத நிா்வாகத்தின் அலட்சியப் போக்குதான் உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறி, மணிகண்டனின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கவேண்டும், மணிகண்டன் பணிபுரிந்த ஒப்பந்த நிறுவனத்தின் உரிமத்தை ரயில்வே நிா்வாகம் ரத்து செய்யவேண்டும் எனபன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதனால் விழுப்புரம் - கிழக்குப் பாண்டி சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, விழுப்புரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, ரயில்வே நிா்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை ’எடுப்பதாக போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.