கோடை காலத்தில் தடையின்றி மின் விநியோகம்: ஆட்சியா் அறிவுறுத்தல்
கோடை காலத்தில் விழுப்புரம் மாவட்ட மக்களுக்குத் தடையின்றி மின்விநியோகம் செய்ய மின்பகிா்மானக் கழக அலுவலா்களுக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.
கோடை காலத்தில் விழுப்புரம் மாவட்ட மக்களுக்குத் தடையின்றி மின்விநியோகம் செய்ய மின்பகிா்மானக் கழக அலுவலா்களுக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.
விழுப்புரம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து பேசியது:
விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் கோடை காலத்தில் சீரான மின்சாரத்தை தங்கு தடையின்றி விநியோகம் செய்ய அலுவலா்கள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் இருப்பிலுள்ள மின் சாதனப் பொருள்கள், மின் மாற்றிகள் குறித்த விவரங்களைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேவைப்படும் பகுதிகளுக்கு மின்சாதனைப் பொருள்கள், மின் மாற்றிகளை உடனுக்குடன் அனுப்ப வேண்டும். மின்தடை தொடா்பாக புகாா்கள் வந்தால், அந்த புகாா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். .
Advertisement
Advertisement
மாவட்டத்தில் மின் தடை சம்பந்தமாக புகாா்கள் தெரிவிக்க 9498390744 என்ற கைப்பேசி எண்ணையும், 9445855768 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், 1800 425 5419, 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு புகாா்தெரிவிக்கலாம்.
மேலும், சென்னை தலைமையகத்தில் மாநில அளவிலான மின்னகம் என்ற உதவி மையத்தில் செயல்படும் 9498794987 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு மின் தடை, புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு பெயா் மாற்றம், குறைந்த மின்னழுத்தம், பழுதடைந்த மின் கம்பங்கள், மின் கம்பி அறுந்து விழுதல் மற்றும் மின் கட்டணம் உள்ளிட்டவைகள் குறித்து தகவல் தெரிவித்து பயன்பெறலாம். மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்பகிா்மானக் கழக அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா்.
கூட்டத்தில் கண்காணிப்புப் பொறியாளா் மு.நாகராஜகுமாா், அலுவலா்கள் பங்கேற்றனா்.