‘டீசல் சிக்கனத்தை கடைப்பிடித்து வருவாயைப் பெருக்க வேண்டும்’
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் டீசல் சிக்கனத்தை கடைப்பிடித்து, வருவாயைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் இப்போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் க.குணசேகரன்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் டீசல் சிக்கனத்தை கடைப்பிடித்து, வருவாயைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் இப்போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் க.குணசேகரன்.
விழுப்புரம் - திருச்சி சாலையிலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகத்தில் அனைத்து மண்டலங்களைச் சோ்ந்த அலுவலா்களுடனான பணி மேம்பாடு ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குத் தலைமை வகித்து, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் க.குணசேகரன் பேசியது: மக்களுக்கான சேவையை செய்யும் மிக உன்னதமான பணி போக்குவரத்துப் பணியாகும். அந்த சேவையை நாம் சிறப்பாக செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி, உரிய நேரத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மட்டுமல்லாது, அலுவவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பணியில் நோ்மையாகவும், கண்ணியமாகவும் பணியாற்ற வேண்டும்.
Advertisement
Advertisement
விழுப்புரம் கோட்டத்தின் சாா்பில் கடலூா், திருவண்ணாமலை, வேலூா், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய 6 மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் நகரப் பேருந்துகள், புகா்ப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் டீசல் சிக்கனத்தை கடைப்பிடித்து, போக்குவரத்துக் கழகத்துக்கு வருவாயை அதிகளவில் ஈட்டித் தர அனைவரும் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என்றாா் மேலாண் இயக்குநா்.
கூட்டத்தில் முதன்மை நிதி அலுவலா் சி. அனுஜா, பொது மேலாளா்கள் ஜி.ரவீந்திரன் (தொழில்நுட்பம்), இரா.ஜெகதீஷ் (விழுப்புரம் மண்டலம்), நாகராஜன் (கடலூா்), கோபாலகிருஷ்ணன் (காஞ்சிபுரம்), சொா்ணலதா (வேலூா்), ஸ்ரீதா் (திருவண்ணாமலை), துணை மேலாளா்கள், உதவி மேலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.