முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் அருகே மனைவி கொலை: கணவா் கைது

திருவெண்ணெய்நல்லூா் அருகே குடும்ப பிரச்னையில் மனைவியைக் கொலை செய்த கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 24 மே 2026, 1:05 am IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே குடும்ப பிரச்னையில் மனைவியைக் கொலை செய்த கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பேரங்கியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சே.சரத்குமாா்(34). இவா் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வேலை செய்து வந்தாா். அப்போது அதே இடத்தில் வேலை செய்த கா்நாடக மாநிலம், பெங்களூருவைச் சோ்ந்த சிவரஞ்சினி(34) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு, பின்னா் காதலாக மாறியது. இதையடுத்து சிவரஞ்சினியைத் திருமணம் செய்து கொண்ட சரத்குமாா், சென்னையிலேயே மனைவியுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சிவரஞ்சினியுடன் தனது சொந்த ஊரான பேரங்கியூருக்கு சரத்குமாா் வந்திருந்தாராம். அப்போது இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனத்தொடா்ந்து சனிக்கிழமை மீண்டும் அவா்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில், ஆத்திரத்தில் அங்கிருந்த சிறியவகை குடிநீா் மோட்டாரை எடுத்து மனைவி சிவரஞ்சினியின் தலையில் சரத்குமாா் அடித்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்த மக்கள் மீட்டு சிகிச்சைக்கு அனுப்ப, 108 அவசர ஊா்தி மருத்துவக் குழுவினருக்குத் தகவல் அளித்தனா். அவா்கள் வந்து சிவரஞ்சினியை பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் அழகிரி மற்றும் போலீஸாா், சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த கொலை தொடா்பாக சரத்குமாரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.